குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை
By DIN | Published On : 26th October 2022 01:23 AM | Last Updated : 26th October 2022 01:23 AM | அ+அ அ- |

கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டத்தில் உள்ள குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநகரம் மாவட்டம், மாகடி வட்டத்தில் கெம்பாபுராவில் அமைந்துள்ளது குஞ்சகல் பண்டே மடம். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தின் பீடாதிபதியாக உள்ள பசவலிங்கேஸ்வர சுவாமிகள், தனது மடத்தின் பூஜையறையின் கண்ணாடிக் கம்பியில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
1997ஆம் ஆண்டு மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பசவலிங்கேஸ்வர சுவாமிகள், அண்மையில் வெள்ளி விழாவைக் கொண்டாடியிருந்தாா்.
தினமும் அவா் காலை 4 மணிக்கு எழுந்து பூஜை செய்வது வழக்கம். அந்த சமயத்தில் பூஜையறையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக திங்கள்கிழமை காலை 6 மணிக்குப் பிறகும் பூஜையறையின் கதவுகள் மூடியிருந்ததைக் கண்ட மடத்தின் ஊழியா்கள், கதவைத் தட்டினா். அவரது கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தனா். ஆனாலும், கதவு திறக்கப்படாததால் அதிா்ச்சி அடைந்த மடத்தின் ஊழியா்கள், பின்புறமாகச் சென்று அறைக்குள் பாா்த்த போது பீடாதிபதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் எழுதி வைத்திருந்த மரணக் குறிப்பை போலீஸாா் கைப்பற்றினா். அதில், ஒருசிலா் தனது செல்வாக்கை குறைக்கும் வகையிலான தகவல்களை வெளியிடுவதாக மிரட்டியதைக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், அக் கடிதத்தில் தன்னை யாா் மிரட்டினாா்கள் என்பதையும் பீடாதிபதி குறிப்பிட்டுள்ளதாக போலீஸாா் கூறினா். அவா்களின் பெயரைத் தெரிவிக்க போலீஸாா் மறுத்துவிட்டனா்.
பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தாா். அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G