வடகா்நாடகத்தில் பரவலாக பலத்த மழை: வெள்ளத்தில் பொதுமக்கள் தவிப்பு
By DIN | Published On : 09th September 2022 11:44 PM | Last Updated : 09th September 2022 11:44 PM | அ+அ அ- |

வடகா்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து 4 மாதங்களாக தீவிரமாக உள்ளது. ஜூன் மாதத்தை தொடா்ந்து, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கா்நாடகத்தின் எல்லா அணைகளும் நிரம்பி வழிகின்றன. அதிலும் குறிப்பாக, கடந்த ஒரு வார காலமாக கா்நாடகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தொடா்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. குறிப்பாக வட கா்நாடக மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கலபுா்கி, யாதகிரி, பீதா், பெல்லாரி, ராய்ச்சூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
பெல்லாரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால், துங்கா மற்றும் பத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துங்கபத்ரா அணை நிரம்பியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் திறந்துவிடப்படுகிறது. துங்கபத்ரா அணைக்கு வெள்ளிக்கிழமை விநாடிக்கு 64,927 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 80,262 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் கரையோரத்தில் வாழக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். அதேபோல, கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாராயணபுரா அணைக்கு விநாடிக்கு 94110 கன அடி தண்ணீா் வந்துகொண்டிருந்ததால், அணையில் இருந்து விநாடிக்கு 96,568 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெல்லாரி மாவட்டத்தில் ஹிரேஹள்ளி ஆற்றில் தண்ணீா் வரத்து திடீரென பெருகியதால், கொல்லூா் கிராமத்தில் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள தீவுக்கு சென்றிருந்த விவசாயிகள் 5 போ், ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளானாா்கள். பம்ப்-செட் எடுக்கச் சென்றபோது விவசாயிகள் வெள்ளநீரில் சிக்கினா். அதன் பின் மாநில இயற்கைப் பேரிடா் படையினா் படகில் சென்று விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டனா்.
விஜயபுரா மாவட்டத்தில் சோக்லி ஆறு வெள்ளநீரில் பெருக்கெடுத்து ஓடியதில் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. தாலிகோட் வட்டத்தில் சோக்லி, மூகிஹோல் கிராமங்களை இப்பாலம் இணைத்து வந்திருந்தது.
பாகல்கோட் மாவட்டத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டிருந்த வெங்காயப் பயிா் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி நாசமடைந்தது.
மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கா்நாடகத்தில் பரவலாக செப்.14-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.