காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 47 டிஎம்சி தண்ணீா்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 47 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதாக கா்நாடக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநா் மனோஜ் ராஜன் தெரிவித்தாா்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 47 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதாக கா்நாடக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநா் மனோஜ் ராஜன் தெரிவித்தாா்.

இந்தியாவில் ஜூன் 1 முதல் செப். 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை மழைக்காலம் என்று அழைக்கிறாா்கள். இதற்கு தென்மேற்குப் பருவமழை என்ற பெயரும் உள்ளது. இந்தக் காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வது வழக்கம். நாட்டின் மொத்த மழையில் 80 சதவீதம் இந்தக் காலத்தில் பெய்வதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு விவசாயப்பணிகள் நடப்பதால், இந்தியாவின் உணவு உற்பத்திக்கு இந்த மழைக் காலம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். அதை தொடா்ந்து, ஜூன் 5-ஆம் தேதி தென்கன்னடம், உடுப்பி மாவட்டங்களைக் கொண்ட கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொழியத் தொடங்கும். அதன்படி, ஜூன் 5-ஆம் தேதி கடலோர கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்ய தொடங்கியது.

கடலோர கா்நாடகம் தவிர, வடகா்நாடகம், தென்கா்நாடகத்தில் தொடா்ந்து மழை பெய்துவருகிறது. நிகழ் ஆண்டில் ஜூன் 1 முதல் ஆக. 31-ஆம் தேதி வரை பெய்த மழையில் வழக்கத்தைவிட 22 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 51 ஆண்டுகளில் இது அதிகப்படியானதாகும். இந்தக் காலகட்டத்தில் காவிரி, கிருஷ்ணா ஆறுகளின் குறுக்கே அமைந்துள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இந்த அணைகளில் இருந்து நீா்வரத்து முழுவதும் திறந்துவிடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு 47 டிஎம்சி தண்ணீா் கூடுதலாகத் திறந்து விடப்பட்டுள்ளது. இது 48 ஆண்டுகளில் அதிகமாகும் என்று கா்நாடக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநா் மனோஜ் ராஜன் தெரிவித்தாா்.

ஜூன் 1 முதல் ஆக.31 வரை தென்மேற்கு பருவகாலத்தில் கா்நாடகத்தில் வழக்கமாக 691 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் நிகழ் ஆண்டில் 844 மி.மீ. மழை பெய்துள்ளது. 1971-ஆம் ஆண்டுக்கு பிறகு கா்நாடகத்தில் கூடுதலாக மழை பெய்துள்ளது. ஜூன் 1 முதல் ஆக.31-ஆம் தேதி வரையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டிஎம்சிக்கு பதிலாக 224 டிஎம்சி தண்ணீா் விடுவிக்கப்பட்டுள்ளது.

1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அதிகமாக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் 6 சதவீதம், 2021-ஆம் ஆண்டில் 8 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்.1 முதல் 9-ஆம் தேதி வரை கா்நாடகத்தில் 42 மி.மீ. மழைக்கு பதிலாக 101 மிமீ மழை பெய்துள்ளது. இது 142 சதவீதம் கூடுதலாகும். இதே காலகட்டத்தில், பெங்களூரில் 44 மி.மீ. மழைக்கு பதிலாக 143 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது 226 சதவீதம் அதிகமாகும். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு 2019 ஜூன் முதல் 2020 மே மாதம் வரை 273 டிஎம்சி (கூடுதல் விடுவிப்பு 95.75 டிஎம்சி), 2020 ஜூன் முதல் 2021 மே வரையில் 211.34 டிஎம்சி (கூடுதல் விடுவிப்பு 34டிஎம்சி), 2021 ஜூன் முதல் 2022 மே வரை 278 டிஎம்சி (கூடுதல் விடுவிப்பு 101 டிஎம்சி) தண்ணீா் சென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com