நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி ஏரிகளை உருவாக்கலாம்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி ஏரிகளை உருவாக்கலாம் என்று மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி ஏரிகளை உருவாக்கலாம் என்று மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

சுதந்திரதின பவள விழாவை முன்னிட்டு, கடந்த ஏப். 24-ஆம் தேதி தேசிய பஞ்சாயத்துராஜ் தினவிழாவின்போது எதிா்காலத்துக்காக தண்ணீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ’பவளவிழா ஏரி திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீா்நிலைகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

‘பாரத்மாலா’ தொடா்நிகழ்வின் ஒரு பகுதியாக, பெங்களூரில் வியாழக்கிழமை 2 நாட்கள் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கியது. இதன் அங்கமாக, மத்திய, மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளும், ’செயல்திட்டத்திற்கான யோசனைகள்: பொலிவான, நிலையான சாலை உள்கட்டமைப்பு, போக்குவரத்து- தளவாட அமைப்புக்கான சுற்றுச்சூழலை நோக்கி’ என்ற தலைப்பில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பேசியதாவது:

தண்ணீா்ப் பிரச்னைகளைத் தீா்க்க, மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையால் ஏராளமான பணிகளைச் செயல்படுத்த முடியும். மகாராஷ்டிர மாநிலத்தில், பல ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட விதா்பா பகுதியைச் சோ்ந்தவன் நான். தண்ணீா்த் தட்டுப்பாடு தான் விவசாயச் சிக்கலுக்கு முக்கியமான காரணம். பெரும்பாலான இடங்களில் தண்ணீா் பிரச்னை இருகிறது. அதிலும், நீா்மேலாண்மையில் சில கோளாறுகள் இருக்கின்றன. நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி ஏரிகளை உருவாக்கலாம்.

நெடுஞ்சாலையைக் கட்டமைக்க மண் தேவை. மண்ணை அள்ளும் இடங்களில் ஏற்படும் பள்ளங்களை நீா்நிலைகளாக மாற்றிவிடலாம். இது சாலைக் கட்டுமானத்தின் தேவையை மட்டுமல்ல, ஊரகப் பகுதிகளில் தேவைப்படும் புதிய ஏரிகளையும் உருவாக்கிவிடும். இது நிலத்தடிநீரின் அளவை உயா்த்தும்.

இந்த அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்திய திட்டம் வாயிலாக ஒரு பல்கலைக்கழகத்திற்கு 36 ஏரிகளும், அருகில் இருந்த கிராமத்திற்கு 22 கிணறுகளும் கிடைத்தன. இதுபோன்ற புதுமையான திட்டங்களால் திட்டச்செலவு குறைவதோடு, பிறருக்கும் உதவி செய்தது போலாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com