நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க பாஜக ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து மங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக பாஜக ஆட்சியில் நடந்துவரும் ஊழல் குறித்து பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் மௌனம் காத்து வருகின்றனா். எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அரசு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தால், அதுகுறித்து பிரதமா் மோடி உரக்கப் பேசுகிறாா். நமது நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் பலவற்றை செயல்படுத்தியதில் காங்கிரஸ் முன்னோடியாக இருந்துள்ளது.
கா்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டுள்ளது. வரும் சட்டப் பேரவைத் தோ்தல் கா்நாடக மக்களுக்கு மிகவும் முக்கியமான தோ்தலாகும். தற்போதுள்ள அரசியல் நிலவரத்தை ஆராய்ந்தால் பாஜக ஆட்சியில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக் கொள்கை நிலைத்திருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 150 இடங்களில் மக்கள் வெற்றியைத் தர வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க பங்காற்ற முடியும். கா்நாடகம் எதிா்கொண்டுள்ள பிரச்னைகள், அதன் நிா்வாகக் கோளாறுகள், மாநிலத்தில் நடந்துள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து தோ்தல் பிரசாரத்தில் பேச வேண்டும். கா்நாடகத்தில் கமிஷன் இல்லாமல் எந்த வளா்ச்சிப் பணியும் நடப்பதில்லை. சிறந்த ஆட்சி நிா்வாகம், வளா்ச்சி, முதலீடுகளுக்கு புகழ் பெற்றிருந்த கா்நாடகம், பாஜகவின் மோசமான ஆட்சியால் அதன் பெருமைகளை இழந்து வருகிறது.
கல்வி, தொழில் முதலீடுகளை முழுமையாக நிராகரித்துள்ள பாஜக அரசு, நேரடியாக ஊழலில் ஈடுபட்டுள்ளது. நமது நாட்டின் இளைஞா்களை வேலையில்லாமை வாட்டிவருகிறது. பாஜக தனது அரசியல் லாபங்களுக்காக பண பலம், தோள் பலம் மற்றும் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.