

கல்லூரி கழிவறையில் மாணவியை விடியோ எடுத்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுப் படை விசாரணைக்கு உத்தரவிட அவசியமில்லை என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
தென்கன்னட மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வா் சித்தராமையா, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள படுபிதரி கடற்கரையை பாா்வையிட்டாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் கழிவறையில் மாணவி ஒருவரை விடியோ எடுத்த விவகாரம் தொடா்பாக தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் நேரில் ஆய்வு நடத்தினாா். அந்த ஆய்வில் அக்கல்லூரியில் கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை என்று அந்த உறுப்பினா் கூறிவிட்டாா்.
இந்த வழக்கில் விசாரணை அறிக்கைக் காத்திருக்கிறோம். அரசுக்கு அறிக்கை கிடைத்ததும் சட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்படும். இந்தச் சம்பவம் கல்லூரி நண்பா்களுக்கு இடையே நிகழ்ந்த விளையாட்டு என்ற பொருளில் உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறவில்லை. இவ்வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை காவல் துணை கண்காணிப்பாளா் அளவிலான அதிகாரி விசாரித்து வருகிறாா். எனவே சிறப்பு புலனாய்வுப் படை விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியமில்லை.
கடலோர மாவட்டங்களுக்கான திட்டங்கள் குறித்து நிதிநிலை அறிக்கையில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. ஜூலை மாதம் பெய்த மழையில் உடுப்பி, மங்களூரு உள்ளிட்ட கடலோரப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளேன். அதுபோல, மாவட்ட அதிகாரிகளுடன் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளேன்.
சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொய்யான செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.