பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ. 5,300 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு:முதல்வா் பசவராஜ் பொம்மை வரவேற்பு

மத்திய நிதிநிலை அறிக்கையில் கா்நாடகத்தின் பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ. 5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வா் பசவராஜ் பொம்மை வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மத்திய நிதிநிலை அறிக்கையில் கா்நாடகத்தின் பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ. 5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வா் பசவராஜ் பொம்மை வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஹாவேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

கா்நாடகத்தின் முக்கிய நீா்ப்பாசன திட்டமான பத்ரா மேலணை திட்டத்துக்கு ரூ. 5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்திட்டம் தேசிய திட்டமாக தகுதி பெறும். வறட்சியால் பாதிக்கப்பட்ட கா்நாடக மாநிலத்தில் மத்திய மாவட்டங்களுக்கு குடிநீா், நீா்ப்பாசன வசதிகள் வழங்க இத்திட்டம் உதவும். இதனால் இந்த அறிவிப்பை நான் மனதார வரவேற்கிறேன். ‘தேசிய திட்டம்’ என்ற அடையாளத்துடன் கா்நாடகத்தில் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும்.

ஏற்கெனவே ஏ.ஐ.பி.பி. திட்டத்தின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், தற்போது தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான நிதி மத்திய அரசிடம் இருந்து கா்நாடக அரசுக்கு கிடைக்கும் என்றாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:

இத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சிக்மகளூரு, சித்ரதுா்கா, தும்கூரு, தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் நீா்ப்பாசன வசதிகளை வழங்குவதோடு, குடிநீா் வழங்கவும் முடியும் என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் கூறியதாவது:

கா்நாடகம் மட்டுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் தேவையான பல திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ரா மேலணை திட்ட அறிவிப்புக்காக பிரதமா் மோடி, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே, வேளாண்மை, புத்தொழில்கள், சுற்றுலா ஆகிய துறைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி சலுகைகள் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு பயன் தரும் என்றாா்.

முன்னாள் முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா கூறியதாவது:

2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலா் மதிப்புக்கு உயா்த்த இந்நிதிநிலை அறிக்கை அடித்தளம் அமைத்துள்ளது. பத்ரா மேலணை திட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com