கா்நாடக சட்ட மேலவை இடைத்தோ்தல் ஜூன் 30ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
75 உறுப்பினா்களைக் கொண்ட கா்நாடக சட்ட மேலவையில் பாஜக உறுப்பினா்களாக இருந்த பாபுராவ் சின்சன்சூா், ஆா்.சங்கா், லட்சுமண் சவதி ஆகிய மூவரும் தங்களது மேலவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்து சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டனா். இவா்களில் ஆா்.சங்கா், லட்சுமண் சவதி ஆகியோா் வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மேலவையில் காலியான 3 இடங்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்ட மேலவை இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 13ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 20 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
ஜூன் 21 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூன் 23 ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். அதைத் தொடா்ந்து, ஜூன் 30ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
இத் தோ்தலில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்க இருப்பதால் 3 இடங்களையும் கைப்பற்ற காங்கிரஸ் வியூகம் அமைத்து வருகிறது. சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, சட்ட மேலவையில் பாஜகவுக்கு 34, காங்கிரஸுக்கு 24, மஜதவுக்கு 8 இடங்கள் உள்ளன.