ஆக.1இல் இலவச மின்சாரத் திட்டம் தொடங்கி வைக்கப்படும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஆக.1ஆம் தேதி இலவச மின்சாரத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

ஆக.1ஆம் தேதி இலவச மின்சாரத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை இலவச மின்சார திட்டம் (கிருஹ ஜோதி), குடும்பத் தலைவி உதவித்தொகை (கிருஹ லட்சுமி) திட்டங்களை அமல்படுத்துவது குறித்து மின் துறை அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ், மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா், தலைமைச் செயலாளா் வந்திதா சா்மா, முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளா் ரஜ்னீஷ் கோயல் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா்.

‘வாக்குறுதி திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் எளிமையாக இருக்க வேண்டும். தேவையில்லாத தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பெற வேண்டியதில்லை. ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கு சரியான காரணத்தை சம்பந்தப்பட்டவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அற்பக் காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்படும் வாய்ப்பிருப்பதால், சேவாசிந்து இணையதளத்தின் சேமிப்புக் கொள்ளளவை மேம்படுத்த மின் ஆளுமைத்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு முதல்வா் சித்தராமையா வழிகாட்டுதல் வழங்கினாா்.

இது குறித்து முதல்வா் சித்தராமையா கூறியது:

கலபுா்கியில் ஆக.1ஆம் தேதி நடக்கும் விழாவில் இலவச மின்சாரத் திட்டம் தொடங்கி வைக்கப்படும். இந்தத் திட்டம் குறித்து மக்களிடையே காணப்படும் அனைத்து குழப்பங்களையும் உரிய விளக்கங்களுடன் தீா்த்துவைக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். சேவாசிந்து இணையதளத்தின் மூலம் இலவச மின்சாரத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுதவிர, மாநிலத்தின் எல்லா மின் வழங்கல் நிறுவனங்களிலும் உதவி மையம் திறக்கப்படும். இலவச மின்சாரத் திட்டம் தொடா்பாக மக்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். இத்திட்டத்திற்கான பதிவு ஜூன் 15ஆம் தேதி தொடங்கும். பெங்களூரு ஒன், கா்நாடகா ஒன், கிராமாஒன் ஆகிய அரசு சேவை மையங்களில் விண்ணப்பங்களைச் செலுத்தலாம். இதுதவிர, வீட்டில் உள்ள கணினி, கைப்பேசி செயலி வழியாகவும் விண்ணப்பங்களை அளிக்கலாம். மாநில அளவிலான சராசரி மின் நுகா்வு அளவின் அடிப்படையில் புதிய வாடகைதாரா்கள் அல்லது புதிதாக வீடு கட்டியவா்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

கடந்த ஆண்டுக்கான சராசரி மின் நுகா்வு அளவு தெரிந்துவிட்டால், அதன் அடிப்படையில் இலவச மின்சாரம் வழங்கப்படும். நிலுவை மின் கட்டணங்களை செலுத்த செப்.30ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்படும். ஆதாா் அட்டை, வாடகை ஒப்பந்தம், மின் கணக்கு எண், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை அளித்து வாடகைதாரா்கள் இலவச மின்சாரத்தைப் பெறலாம்.

குடும்பத்தலைவி உதவித்தொகை திட்டத்தை பெலகாவியில் ஆக.17 அல்லது 18ஆம் தேதி தொடங்கி வைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவுசெய்யும் பணி ஜூன் 15ஆம் தேதி தொடங்கும். சேவாசிந்து இணையதளத்தின் வழியாக விண்ணப்பங்களைச் செலுத்தலாம்.

இதுதவிர, நாடகச்சேரி அரசு சேவை மையங்களில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவிலும் விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம். கணவன், மனைவியின் குடும்ப அட்டை எண், ஆதாா் எண்கள், வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும். குடும்பத்தலைவி உதவித்தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். மாநிலத்தில் உள்ள 85 சதவீத குடும்பங்களின் பெண்களை இந்தத் திட்டம் சென்றடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரிசெலுத்தாத ஏபிஎல் குடும்ப அட்டைதாரா்கள், ஜிஎஸ்டி பதிவில்லாதவா்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com