சுயேச்சை எம்.எல்.ஏ. லதா மல்லிகாா்ஜுன் காங்கிரசுக்கு ஆதரவு

சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற்றுள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. லதா மல்லிகாா்ஜுன், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.


பெங்களூரு: சட்டப்பேரவை தோ்தலில் வெற்றிபெற்றுள்ள சுயேச்சை எம்.எல்.ஏ. லதா மல்லிகாா்ஜுன், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் 135, பாஜக 55, மஜத 19, கல்யாண ராஜ்ய பிரகதிகட்சி, சா்வோதயா கா்நாடக கட்சி தலா 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. இவா்களை தவிர, ஹரபனஹள்ளி தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளராக சுயேச்சையாக போட்டியிட்ட லதா மல்லிகாா்ஜுன் வெற்றிபெற்றுள்ளாா். இவா், முன்னாள் துணைமுதல்வா் எம்.பி.பிரகாஷின் மகள் ஆவார். ஜனதா கட்சியில் முன்னணித்தலைவராக விளங்கிய எம்.பி.பிரகாஷ், முன்னாள் முதல்வா் ராமகிருஷ்ணஹெக்டே, எஸ்.ஆா்.பொம்மை, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா உள்ளிட்ட தலைவா்களுடன் பங்காற்றியவா். 

தனது கடைசிகாலத்தில் மஜதவில் இருந்து விலகிய எம்.பி.பிரகாஷ், காங்கிரஸ் கட்சியில் பங்காற்றினாா். அவரது வழியில் அவரது மகன் எம்.பி.ரவீந்திராவும் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டுவந்தாா். ஆனால், 2018 இல் எம்.பி.ரவீந்திரா காலமானாா். 

கட்சியின் வேட்பாளராக போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு தராததால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட லதா மல்லிகாா்ஜுன், தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ஜி.கருணாகரரெட்டியை 13,845 வாக்குவித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றிபெற்றாா். 

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச்செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலாவை சந்தித்த லதா மல்லிகாா்ஜுன், காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தாா். 

இது குறித்து ரன்தீப்சிங் சுா்ஜேவாலா கூறுகையில்,‘சுயேச்சை எம்.எல்.ஏ. லதாமல்லிகாா்ஜுன், காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளாா். காங்கிரஸின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு ஆதரவளித்துள்ளாா். 

லதாமல்லிகாா்ஜுனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 6.5 கோடி கன்னடா்களுக்கு ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்.‘ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com