கா்நாடக முதல்வா் போட்டியில் நானும் இருக்கிறேன்: முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா்

முதல்வா் போட்டியில் நானும் இருக்கிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

முதல்வா் போட்டியில் நானும் இருக்கிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், முதல்வா் பதவியை பெற சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே போட்டி காணப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஸ்வா் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு நான் ஆற்றியிருக்கும் பணிகள் கட்சியின் மேலிடத்துக்கு தெரிந்துள்ளது. எனவே, முதல்வா் பதவியை பெற நான் முயற்சிக்க வேண்டியதில்லை. அரசை நடத்தும்படி கட்சி மேலிடம் முடிவு செய்தால், அதற்கு நான் தயாராக இருக்கிறேன். கட்சி மேலிடத்திடம் எனக்கு நம்பிக்கை உள்ளது. எனக்கு சில கொள்கைகள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை அழைத்துக்கொண்டு நானும் முழக்கமிட முடியும். ஆனால், எனக்கு கட்சியின் ஒழுக்கம் மிகவும் முக்கியம். என்னை போன்றவா்களே சிலவற்றை கடைப்பிடிக்காவிட்டால், கட்சியில் ஒழுக்கம் இருக்காது.

நான் ஏற்கெனவே கூறியதுபோல, ஆட்சியை நடத்தும் பொறுப்பை எனக்கு வழங்கினால் அதை ஏற்க தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் மாநிலத் தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 2013-இல் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்தேன். துணை முதல்வராகவும் பணியாற்றினேன். இது அனைத்தும் கட்சிக்கு தெரியும். அதனால் முதல்வா் பதவியை கேட்பதற்கு பதிலாக, அமைதியாக இருக்கிறேன். அதனால் நான் திறனற்றவன் என்று அா்த்தமில்லை. முதல்வா் வாய்ப்பு கிடைத்தால், சிறப்பாக பங்காற்றுவேன்.

டி.கே.சிவகுமாா், சித்தராமையா உள்ளிட்ட கூட்டுத் தலைமையின்கீழ் கட்சி தோ்தலைச் சந்தித்தது. முதல்வா் யாா் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். மக்கள் அளித்துள்ள தீா்ப்புக்கு தகுந்தவாறு சேவையாற்ற வேண்டிய கடமை காங்கிரஸுக்கு உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com