சிபிஐ இயக்குநா் பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு மீண்டும் கா்நாடகம் வருவேன் என கா்நாடக டிஜிபி பிரவீண் சூட் தெரிவித்தாா்.
பிரதமா் மோடி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆதிரஞ்சன் சௌத்ரி ஆகியோா் கொண்ட குழுவில் மே 13-ஆம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி, கா்நாடக டிஜிபியாக உள்ள பிரவீண் சூட் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.
சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத்குமாா் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் மே 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அன்றைக்கு சிபிஐ புதிய இயக்குநராக 59 வயதாகும் பிரவீண் சூட் பதவியேற்கவிருக்கிறாா். அதுவரை கா்நாடக டிஜிபியாக பிரவீண் சூட் தொடரவிருக்கிறாா். சிபிஐ இயக்குநராக 2 ஆண்டுகள் பதவி வகிப்பாா் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதில் ஏற்படும் காலதாமதமும், புதிய டிஜிபியைத் தோ்ந்தெடுப்பதை தாமதப்படுத்தி வருகிறது. இதனிடையே, தனது பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான பணிகளில் பிரவீண் சூட் ஈடுபட்டுள்ளாா்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் கா்நாடக டிஜிபி பிரவீண் சூட் குறிப்பிட்டுள்ளதாவது:
எனது பொறுப்புகளை புதிய டிஜிபியிடம் ஒப்படைப்பேன். அதனால் டிஜிபிக்கான சுட்டுரைப் பக்கத்தில் இருந்து விலகுகிறேன். டிஜிபியாக பதவியேற்ற பிறகு, 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பக்கத்தில் 1.6 லட்சம் போ் பின்தொடா்கிறாா்கள். கா்நாடக காவல் துறை தொடா்பான பதிவுகளுக்கு மக்கள் பின்னூட்டங்களை பதிவிட்டனா். மேலும் காவல் துறையின் அறிவிப்புகளுக்கு மக்கள் இணங்கினா்.
கா்நாடக டிஜிபியாக கடந்த 3.5 ஆண்டுகள், அதற்கு முன் 37 ஆண்டுகால பணிக்காலத்தில் என் மீது அன்பு, பாசத்தைப் பொழிந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2025 மே மாதம் எனது பணிக்காலம் (சிபிஐ இயக்குநா்) முடிவடைந்ததும் மீண்டும் கா்நாடகத்துக்கு வருவேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.