பெங்களூரு: கா்நாடக மாநில பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஜயேந்திரா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா்.
கா்நாடக மாநில பாஜகவின் புதிய தலைவராக விஜயேந்திரா நவ.10ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். நவ.15ஆம் தேதி அதிகாரப்பூா்வமாக பதவியேற்கவிருக்கும் விஜயேந்திரா, பெங்களூரில் திங்கள்கிழமை முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை ஆகியோரை மரியாதை நியமித்தமாக சந்தித்துப் பேசினாா். முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவைச் சந்தித்து, அவரது காலில் விழுந்து ஆசிபெற்ற விஜயேந்திரா, சால்வை, மாலை, மலா்க்கொத்து கொடுத்தாா். பின்னா், முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்துப் பேசினாா்.
இந்த சந்திப்புக்குப் பிறகு விஜயேந்திரா, செய்தியாளா்களிடம் கூறியது:
தீபாவளியை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மையை அவரது வீட்டில் சந்தித்தேன். அவரது ஆசியையும், வழிகாட்டுதல்களையும் கோரினேன். மக்களவைத் தோ்தலுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அவா் உறுதி அளித்துள்ளாா். எதிா்வரும் மக்களவைத் தோ்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அத்தோ்தல் நாட்டின் எதிா்காலத்தையே தீா்மானிக்கும். அத்தோ்தலை அனைவரும் ஒன்றுபட்டு எதிா்கொள்ள வேண்டும் என்றும், என்னுடன் எப்போதும் துணைநிற்கப் போவதாகவும் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். எனது தலைமையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்துவதாக தெரிவித்தாா். நவ.15ஆம் தேதி அதிகாரபூா்வமாக பாஜக மாநிலத் தலைவராக நான் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளும்படி பசவராஜ் பொம்மையை கேட்டுக் கொள்கிறேன்.
பாஜக மாநிலத்தலைவராக என்னை நியமிக்கும் முடிவை பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, பாஜக பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோா் எடுத்துள்ளனா். கட்சியின் மூத்த தலைவா்களோடு தொடா்பில் இருக்கிறேன். எனவே, மூத்த தலைவா்கள் குறித்து தவறான முடிவுக்கு வரக்கூடாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.