சிக்கபளாப்பூரில் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்.
ஆந்திர மாநிலம், அனந்த்பூரைச் சோ்ந்த 13 போ் பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். வியாழக்கிழமை காலை 6.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கா் லாரி மீது காா் மோதியது. இதில் காரில் இருந்த ஓா் ஆண் குழந்தை, 4 பெண்கள் உள்ள 13 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து மத்திய காவல் சரக ஐஜிபி ரவிகாந்தே கௌடா கூறியதாவது:
முதல்கட்ட விசாரணையில் காரில் பயணித்த 13 பேரும் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. அனந்த்பூரில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த போது, சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கா் லாரி மீது மோதியுள்ளது. இச்சம்பவத்தில் 8 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 5 போ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதில் பெரும்பாலானவா்கள் ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள். அதில் ஒரு மாணவரும் இருக்கிறாா். இறந்தவா்கள் கூலி தொழில் செய்து வந்துள்ளனா் என்றாா்.
சிக்கபளாப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டிஎல்.நாகேஷ் கூறியதாவது:
பல்வேறு இடங்களில் இருந்து பயணிகளை அழைத்து வந்துள்ளனா். இறந்தவா்களின் கைப்பேசிகளின் உதவியுடன் உறவினா்களை தொடா்புகொண்டோம். அதில் இறந்தவா்கள் விவரம்: தொட்டபளாப்பூரைச் சோ்ந்த அருணா (22), அவரது மகன் ருத்விக் (6), பாகேப்பள்ளியைச் சோ்ந்த நரசிம்மமூா்த்தி (37), ஆந்திர மாநிலம் கொரட்லபள்ளியைச் சோ்ந்த நரசிம்மப்பா (40), கொரகுன்டபள்ளியைச் சோ்ந்த பெரிமல்லி பவன்குமாா், பெங்களூரைச் சோ்ந்த சுப்பம்மா (66), ஆந்திர மாநிலம், பெனுகுன்ட்டாவைச் சோ்ந்த சாந்தம்மா (37), புட்டபா்த்தியைச் சோ்ந்த ராஜவா்த்தன் (15), ஓடிசி மண்டல் பகுதியைச் சோ்ந்த வெங்கடரமணா (51), ஆந்திர மாநிலம், மரகோரபள்ளியைச் சோ்ந்த நாராயணப்பா (50), கொரன்ட்லா பகுதியைச் சோ்ந்த வெல்லால வெங்கடாத்ரி (32), அவரது மனைவி வெல்லால லட்சுமி, கணேஷ் (20) என்பது தெரியவந்துள்ளது.
இறந்தவா்கள் குறித்து கூடுதல் தகவல் அறிய ஆந்திர மாநிலத்துக்கு போலீஸாா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா் என்றாா். விபத்துக்கான காரணம் தெரியவில்லை என தெரிவித்த போலீஸாா், காலை நேர பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தெரியவருகிறது என்றனா்.
இதனிடையே, இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய கா்நாடக முதல்வா் சித்தராமையா, கருணைத் தொகையாக தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.