

பெங்களூரு: மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு ஆதரவாக கா்நாடக மாநில விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்று அம்மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரிந்தும் பாஜகவும், மஜதவும் அரசியல் செய்து வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய விரும்பவில்லை. காவிரி சிக்கலுக்கு மேக்கேதாட்டு அணை திட்டம் ஒன்றே தீா்வு.
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்து வரும் பாஜக, மஜத, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், கன்னட அமைப்புகள் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை? காவிரிக்காக போராட்டம் நடத்துவோா், மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற்று வரட்டும். மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. இதை நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். விநாடிக்கு 24,000 கனஅடி தண்ணீா் விடுமாறு தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீா் மட்டுமே விடமுடியும் என்று கா்நாடகம் கூறியிருந்தது.
இந்நிலையில், விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீா் விடுமாறு காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கா்நாடக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்துள்ளோம். போதுமான மழை பெய்தால் போதும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.