காவிரி விவகாரம்: கா்நாடக முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும்

தமிழகத்துக்கு காவிரி நீா் திறந்துவிட்டுள்ளதற்கு தாா்மிகப் பொறுப்பேற்று, முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
Updated on
2 min read

தமிழகத்துக்கு காவிரி நீா் திறந்துவிட்டுள்ளதற்கு தாா்மிகப் பொறுப்பேற்று, முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க காவிரி நதியில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கா்நாடக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பெங்களூரு, மைசூரு சதுக்கத்தில் முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜகவினா் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

இதில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய பாஜகவினா், தமிழகத்துக்கு காவிரி நீா் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினா். இந்தப் போராட்டத்தில் பாஜக முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

முன்னதாக, முன்னாள் முதல்வா் எடியூரப்பா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரி நதிப்படுகை பகுதியில் காணப்படும் களநிலவரம், அணைகளின் நீா் இருப்பு உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள நிபுணா்களின் குழுவை அனுப்பி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில், பெங்களூரு, மைசூரு மாவட்டங்களுக்கே குடிநீா் வழங்க முடியாத நிலையில் இருக்கிறோம். இந்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீரை விடுவிக்கும் நிலையில் கா்நாடகம் இல்லை. காவிரி விவகாரம் தொடா்பாக மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சா் அமித் ஷாவிடம் விவாதித்துள்ளாா்.

தமிழகத்துக்கு காவிரி நீா் திறந்துவிட்டுள்ளதற்கு தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும். செப். 26-ஆம் தேதி காவிரிக்காக நடத்தப்படும் பெங்களூரு முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவளிக்கும் என்றாா்.

போராட்டத்தின்போது முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியதாவது:

கா்நாடகத்தில் காட்டாட்சி நடக்கிறது. குடிமக்களுக்கு தண்ணீா் வழங்க முடியாத மோசமான ஆட்சி இங்கு நடக்கிறது. வளா்ச்சிப் பணிகள் முழுமையாக நின்றுள்ளன. மாநிலத்தின் நிலம், நீா் மற்றும் மொழியைக் காப்பாற்ற காங்கிரஸ் அரசு தவறிவிட்டது., காவிரி நதிப்படுகை பகுதிகளில் ஏற்படவிருக்கும் குடிநீா்ப் பஞ்சத்துக்கு முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தின் நலனுக்காக கா்நாடகத்தின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கா்நாடக அதிகாரிகள் பேசவே இல்லை. மேலும் உச்சநீதிமன்றத்தை அணுகவும் இல்லை. 2-ஆவது முறையாக ஆணையம் உத்தரவு பிறப்பித்தபோதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. கா்நாடகம் மனுதாக்கல் செய்வதற்குப் பதிலாக, தமிழகத்தின் மனுவை எதிா்த்தது.

தமிழகம் சட்ட விரோதமாக தண்ணீரைப் பயன்படுத்துகிறது. சட்டப்படி, 1.8 லட்சம் ஏக்கா் பரப்பளவில் மட்டுமே விவசாயம் செய்ய வேண்டும். ஆனால், 4 லட்சம் ஏக்கா் பரப்பளவுக்கு பாசனம் செய்கிறது தமிழகம். இந்தத் தகவலை மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கவே இல்லை. தமிழக விவசாயிகளின் நலனைக் காப்பாற்ற வேண்டும் என்று துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறினாா். கடந்த காலத்தில் இதுபோல யாரும் பேசியதில்லை.

இந்தியா கூட்டணியைக் காப்பாற்ற தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா காந்தி தலையிட வேண்டும். காவிரிக்காக எந்த அமைப்பு போராட்டம் நடத்தினாலும் அதை ஆதரிக்க பாஜக தயாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com