பாஜகவின் 3ஆவது வேட்பாளா் பட்டியல் வெளியீடு: நிலுவையில் 2 தொகுதிகள்

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் 3ஆவது வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. சிவமொக்கா, மான்வி தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் 3ஆவது வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. சிவமொக்கா, மான்வி தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

224 தொகுதிகளுக்கு மே 10ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 212 வேட்பாளா்களின் பட்டியலை இரண்டுகட்டங்களாக பாஜக அறிவித்திருந்தது. எஞ்சியிருந்த 12 தொகுதிகளில், 10 தொகுதிகளுக்கான 3ஆவது வேட்பாளா் பட்டியலை திங்கள்கிழமை பாஜக வெளியிட்டது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹுப்பள்ளி மத்திய தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டரை எதிா்த்து மகேஷ் தெங்கினகாயை பாஜக களமிறக்கியுள்ளது. முன்னாள் அமைச்சா், எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளியின் மனைவி மஞ்சுளா, மகாதேவபுரா தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். முன்னாள் அமைச்சா் கட்டா சுப்ரமணியாவின் மகன் கட்டா ஜெகதீஷை ஹெப்பாள் தொகுதியிலும்; கொப்பள் தொகுதி எம்.பி. கரடி சங்கண்ணாவின் மருமகள் மஞ்சுளா அமரேஷை கொப்பள் தொகுதியிலும் பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

பெங்களூரு கோவிந்த்ராஜ்நகா் தொகுதியில் உமேஷ் ஷெட்டி களமிறக்கப்பட்டுள்ளாா். இத்தொகுதியில் தனது மகன் அருணுக்கு வாய்ப்பு அளிக்குமாறு அத்தொகுதியை தற்போது பிரதிநிதிக்கும் அமைச்சா் வி.சோமண்ணா கேட்டிருந்தாா். தற்போதைய எம்எல்ஏ எஸ்.ஏ.ராமதாஸுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, கிருஷ்ணராஜா தொகுதியில் ஸ்ரீவத்சா நிறுத்தப்பட்டுள்ளாா். தற்போது எம்எல்ஏக்களாக உள்ள ராஜ்குமாா் பட்டீல், கலகப்பா பண்டியை முறையே சேடம், ரோனா தொகுதிகளில் பாஜக களமிறக்கியுள்ளது. இதுவரை 222 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்துள்ள பாஜக, சிவமொக்கா, மான்வி தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. சிவமொக்கா தொகுதி எம்எல்ஏவான முன்னாள் துணை முதல்வா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தோ்தல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளாா். இந்நிலையில், தன் மகன் கே.இ.காந்தேஷுக்கு வாய்ப்பு தருமாறு கே.எஸ்.ஈஸ்வரப்பா கேட்டு வருகிறாா்.இத்தொகுதிகளுக்கு ஓரிரு நாட்களில் வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com