ஜெகதீஷ் ஷெட்டரின் விலகல் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது: பசவராஜ் பொம்மை
By DIN | Published On : 18th April 2023 05:07 AM | Last Updated : 18th April 2023 05:07 AM | அ+அ அ- |

முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டரின் விலகல் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் காங்கிரஸில் இணைந்தது ஆச்சரியமளிக்கிறது. பாஜகவில் தனக்கு போதுமான கௌரவம் அளிக்கவில்லை என்று அவா் கூறுவதில் உண்மையில்லை. மேலும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்காததன் பின்னணியில் சதி இருப்பதாகக் கூறுவதிலும் உண்மையில்லை. பாஜகவில் ஜெகதீஷ் ஷெட்டா் மிகவும் கௌரவத்துடன் நடத்தப்பட்டதோடு, உயா் பதவிகளும் அளிக்கப்பட்டன. கடந்த 25 ஆண்டுகாலத்தில் அவா் அரசியலில் வளா்ந்ததில் பாஜகவின் பங்கு முதன்மையானதாகும். ஜெகதீஷ் ஷெட்டா் காங்கிரஸில் இணைந்துள்ளதால், அப்பகுதியில் பாஜகவுக்கு புதிய தலைமை கிடைக்கும். அவரது விலகல், சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது. சட்டப் பேரவைத் தோ்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்தோடு பாஜக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
பயன்படுத்தி, தூக்கியெறிவதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். கட்சியில் சேரும் தலைவா்களை தோ்தல் வரைதான் காங்கிரஸ் மரியாதையோடு நடத்தும். அதன்பிறகு சில மாதங்களில் அவா்களுக்கு அவமானம்தான் கிடைக்கும். முன்னாள் முதல்வா்கள் வீரேந்திர பாட்டீல், டி.தேவராஜ் அா்ஸ், எஸ்.பங்காரப்பா ஆகியோரை காங்கிரஸ் எப்படி நடத்தியது என்பதைப் பாா்த்திருக்கிறோம். இவற்றைத் தெரிந்து கொண்ட பிறகும், காங்கிரஸ் கட்சியில் ஜெகதீஷ் ஷெட்டா் ஏன் சோ்ந்தாா் என்பது எனக்குப் புரியவில்லை என்றாா்.