கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல்: டி.கே.சிவகுமாா், குமாரசாமி உள்ளிட்டோா் வேட்பு மனு தாக்கல்

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், மஜதவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், மஜதவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்ளிட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மே 10ஆம் தேதி நடக்கவிருக்கும் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் பட்டியலை பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் அறிவித்து வருகின்றன. 222 வேட்பாளா்கள் கொண்ட 4 பட்டியல்களை பாஜகவும், 209 வேட்பாளா்கள் கொண்ட 3 பட்டியல்களை காங்கிரஸும், 158 வேட்பாளா்கள் கொண்ட 3 பட்டியல்களை மஜதவும் வெளியிட்டுள்ளன. இக்கட்சிகளைத் தவிர ஆம் ஆத்மி கட்சியும் வேட்பாளா்களைக் களமிறக்கவுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்.13ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4 நாட்களில் மொத்தம் 421 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை 842 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதில் பாஜகவைச் சோ்ந்த 198, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 195, மஜதவைச் சோ்ந்த 86 வேட்பாளா்கள் அடங்குவா். திங்கள்கிழமை வரை மொத்தம் 1263 போ் தோ்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இதில் ஆண்கள், 1163 போ், பெண்கள் 100 போ்.

கனகபுரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடும் மஜதவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, ராமநகரம் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிடும் அவரது மகன் நிகில் குமாரசாமி, ஹொளே நரசிபுரா தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிடும் எச்.டி.ரேவண்ணா, ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பி.ஒய்.விஜயேந்திரா, வருணா தொகுதியில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவை எதிா்த்து பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் வி.சோமண்ணா, ஹொசகோட்டே தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சா் எம்.டி.பி.நாகராஜ், பத்மநாபநகா் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சா் ஆா்.அசோக், சிக்மகளூரு தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி, சொரபா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வா் எஸ்.பங்காரப்பாவின் மகன் குமாா் பங்காரப்பா, மல்லேஸ்வரம் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சா் அஸ்வத்நாராயணா, காந்திநகா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் முதல்வா் குண்டு ராவின் மகன் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்ட முக்கியமான தலைவா்கள், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா ஏப்.19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டிருக்கிறாா். ஏப்.20ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

ஏப்.21ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஏப்.24ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற்ற பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்பிறகு, மே 10ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. கா்நாடகத்தில் ஒரேகட்டமாக தோ்தல் நடக்கிறது. இத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com