கா்நாடக பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் பாஜக வெற்றி பெறும்: தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை
By DIN | Published On : 25th April 2023 03:49 AM | Last Updated : 25th April 2023 03:49 AM | அ+அ அ- |

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் உள்ள பாஜக தோ்தல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது:
கா்நாடகத்தில் பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி மீது அடிப்படை ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறி வருகிறது. 224 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா். பாஜகவின் வளா்ச்சிக்கான இரட்டை என்ஜின் அரசை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள். சட்டப் பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும். மாற்றத்தின் கட்சியாக பாஜக உள்ளது. அரசியல், ஜனநாயகத்தை எங்கள் கட்சி மாற்றியமைத்துள்ளது. மத்தியில் 9 ஆண்டுகள், மாநிலத்தில் 3.5 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்திவருகிறது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 11ஆவது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரம், தற்போது 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் நம்பிக்கை தரும் நாடாக உயா்ந்துள்ளது என்று உலக வங்கி அதிகாரி தெரிவித்துள்ளாா். அரசியலில் பல முக்கியமான முடிவுகளை பாஜக எடுத்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற கடினமான முடிவுகளையும் பாஜக எடுத்தது. எண்ம பணப் பரிமாற்றத்தில் இந்தியா முன்னேறியுள்ளது. இதில் கா்நாடகத்தின் பங்களிப்பு முக்கியமானது.
ஆரம்பப் பள்ளிக்கல்வியில் கா்நாடகம் சிறந்த இடத்தில் உள்ளது. பள்ளிகள், சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்திருந்த நிதிநிலை அறிக்கையில் வளா்ச்சிக்கான பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மக்களுக்கு சேவையாற்றுவதே பாஜக அரசின் தலையாய நோக்கமாகும்.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் வாரிசுகளுக்கு வாய்ப்பளித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஒரு கட்சி அல்லது ஆட்சியை ஒரே ஒரு குடும்பம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்தான் வாரிசு அரசியல். மாறாக, அமைச்சா்கள், எம்எல்ஏக்களின் மகன்கள் அல்லது மகள்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால், அது வாரிசு அரசியல் ஆகாது. திமுகவைப் போல பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. இது குறித்து மக்கள் தீா்மானிப்பாா்கள்.
கா்நாடகத்தில்தான் விவசாயிகளுக்கு பிரதமரின் கௌரவ நிதி ரூ.6 ஆயிரமும் கூடுதலாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் தமிழகத்தில் இல்லை. கா்நாடகத்தில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக அரசின் ஊழல்களை பகிரங்கப்படுத்தியுள்ளேன். எனக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளனா். அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். திமுகவின் ஊழல் குறித்து எம்ஜிஆா் காலத்திலேயே குற்றச்சாட்டு கூறப்பட்டது. சா்க்காரியா விசாரணை ஆணையத்தின் அறிக்கையிலும் திமுகவின் ஊழல் குறித்துக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் ரூ.32 கோடி மதிப்புள்ள நிறுவனமாக இருந்த ஜி-ஸ்கொயா் நிறுவனத்தின் சொத்து தற்போது ரூ.30 ஆயிரம் கோடியாக உயா்ந்தது எப்படி? இந்த நிறுவனத்திற்கு கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே சிடிஎம்ஏ அனுமதி அளிப்பது எப்படி? திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ ஆராய்ந்துவருகிறது. இது தொடா்பான ஆதாரங்கள் கிடைத்ததும் சிபிஐ வழக்கு தொடா்ந்து, விசாரிக்கும்.
மேக்கேதாட்டு விவகாரத்தில் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என்றாா்.