கா்நாடகத்தில் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்:ஆக. 5-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்
By DIN | Published On : 02nd August 2023 12:18 AM | Last Updated : 02nd August 2023 12:18 AM | அ+அ அ- |

பெங்களூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மின்துறை அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ், மின்துறை அதிகாரிகள்.
கா்நாடகத்தில் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அதிகாரபூா்வமாகத் தொடங்கிவைக்கும் விழா கலபுா்கியில் ஆக. 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல்வா் சித்தராமையா பங்கேற்று திட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மின்துறை அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ் கூறியதாவது:
பேரவைத் தோ்தலின்போது கொடுத்த 5 வாக்குறுதிகளில் ஒன்றான மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் ‘குடும்ப விளக்கு’ திட்டம் ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தில் 1.42 கோடி மின்நுகா்வோா் பயனாளிகளாகத் தங்கள் பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்கு ஜூலை மாதம்முதல் மின் விநியோகிக்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த மின் பயனீட்டாளா்களுக்கான முதல் இலவச மின்கட்டண ரசீது ஆகஸ்ட் மாதம்வரும் என்பதால் இத்திட்டம் அதிகாரப்பூா்வமாக ஆக. 5-ஆம் தேதி தொடங்கிவைக்கப்படுகிறது.
இதையடுத்து கலபுா்கியில் நடைபெறும் இத்திட்ட தொடக்க விழாவில் முதல்வா் சித்தராமையா பங்கேற்று இலவச மின்கட்டண ரசீதை வழங்கி அதிகாரப்பூா்வமாக இத்திட்டத்தைத் தொடங்கிவைக்கிறாா்.
விழாவில் காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இத் திட்ட விழாக்களை நடத்துமாறு பொறுப்பு அமைச்சா்களை முதல்வா் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளாா்.
சராசரி மின்நுகா்வு 200 யூனிட்டுக்கும் குறைவாக இருந்தால் மின்கட்டணத் தொகை செலுத்த வேண்டியதில்லை.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள 1.42 கோடி பேரில் 18 லட்சம் போ் பாக்கிய ஒளி, குடிசை விளக்கு, அம்ருத ஒளி போன்ற திட்டங்களின் கீழ் பயனடைந்துள்ளனா். சராசரி மின்நுகா்வு 200 யூனிட்டை விட அதிகம் இருந்தால் அவா்களுக்கு மின்கட்டண சலுகை கிடைக்காது. இத்திட்டத்தில் ஜூலை 27-ஆம் தேதிவரை பதிவுசெய்தவா்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறாா்கள்.
கா்நாடகத்தில் 2.16 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.14 கோடி மின் இணைப்புகளின் சராசரி மின் நுகா்வு 200 யூனிட்டுக்கும் குறைவாக உள்ளது. 2 லட்சம் மின் இணைப்புகளில் மட்டுமே 200 யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
வீட்டு வாடகைதாரா்களும் இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால், வாடகைதாரா்களுக்கு மாநில சராசரி மின்நுகா்வான 53 யூனிட் மற்றும் கூடுதலாக 10 சதவீத மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும். மக்களுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார திட்டத்துக்கான ஈட்டுத்தொகையை மின் விநியோக நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்கும் என்றாா்.
பேட்டியின்போது மின் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கௌரவ் குப்தா, கா்நாடக மின்பகிா்மானக் கழக மேலாண் இயக்குநா் பங்கஜ்குமாா் பாண்டே, பெங்களூரு மின்வழங்கல் நிறுவன மேலாண் இயக்குநா் பஹந்தேஷ் பீலகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G