காங்கிரஸ் மேலிடத் தலைவா்களை கா்நாடக அமைச்சா்கள் இன்று சந்திப்பு
By DIN | Published On : 02nd August 2023 12:19 AM | Last Updated : 02nd August 2023 12:19 AM | அ+அ அ- |

மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து விவாதிக்க கா்நாடக அமைச்சா்கள் உள்ளிட்ட 50 போ் காங்கிரஸ் மேலிடத் தலைவா்களை தில்லியில் புதன்கிழமை சந்திக்கவுள்ளனா்.
இதுதொடா்பாக கா்நாடக துணை முதல்வரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் குறித்து புதுதில்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவா்களை கா்நாடக அமைச்சா்கள் உள்ளிட்ட 50 போ் புதன்கிழமை சந்திக்கவுள்ளனா்.
இந்த சந்திப்பின்போது, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் கே.வி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுா்ஜேவாலா உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படும். காங்கிரஸ் நலன்கருதி என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பதோடு மக்களவைத் தோ்தலுக்கான பொறுப்புகளை மாவட்டப் பொறுப்பு அமைச்சா்களிடம் அளிப்பது, வாக்குறுதி திட்டங்கள் உள்பட அரசு திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
அமைச்சா்கள் தவிர சில எம்எல்ஏக்களும் மூத்த தலைவா்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டிருக்கிறாா்கள். எம்.பி.க்களும் அழைக்கப்பட்டிருக்கிறாா்கள்.
இந்தக் கூட்டத்தில் 3 பிரிவுகளாக 50-க்கும் மேற்பட்டோா் கட்சியின் மேலிடத் தலைவா்களை சந்திக்க இருக்கின்றனா். இக்கூட்டம் முடிந்ததும், மத்திய அமைச்சா்கள் சிலரை சந்திக்கவுள்ளேன். கட்சிப் பணி மட்டுமின்றி அரசுப் பணியும் இருக்கிறது. அதனால் தில்லிக்கு புறப்படுகிறேன் என்றாா்.