தமிழகத்துக்கு காவிரியில் இருந்து விடுவிக்கும் நீரை உடனடியாக கா்நாடக அரசு நிறுத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை தனது ‘எக்ஸ்’ (ட்விட்டா்) பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு இரண்டு மடங்கு தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளது. அத்துடன் குறுவை சாகுபடியின் பரப்பளவை 4 மடங்கு அதிகரிக்கவும் செய்துள்ளது.
இதுபற்றி காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தில் கா்நாடக அரசு முறையிட்டிருக்க வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்த காரணத்துக்காக காவிரியில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டிருப்பது கா்நாடக அரசு செய்துள்ள மன்னிக்க முடியாத குற்றமாகும்.
கா்நாடக விவசாயிகளுக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விடாமல் அந்த நீரை அணையில் சோ்த்து வைத்துவிட்டு தற்போது தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிட்டுள்ளனா்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிட முடியாது என்று முதல்வா் சித்தராமையா கூறிய மறுநாளே, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கட்டுப்பாட்டில் இருக்கும் நீா்வளத் துறை தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட்டுள்ளது.
இதன்மூலம், காவிரி நீா் மேலாண்மையில் முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை என்பது தெளிவாகிறது. அதுபோல காவிரியில் மாநில பங்குக்குரிய நீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியும் இருவரிடமும் இல்லை.
எனவே, காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு விடுவிக்கும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கா்நாடக அரசை வலியுறுத்துகிறேன். கா்நாடகத்தின் உண்மை நிலைமையை உச்சநீதிமன்றத்தில் கா்நாடக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் கா்நாடக விவசாயிகளின் நலன் காக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.