காவிரி நீா்ப் பங்கீடு: தொடரும் சட்டப் போராட்டம்
By ந.முத்துமணி | Published On : 17th August 2023 02:09 AM | Last Updated : 17th August 2023 02:09 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் பிறந்து, கேரளம், புதுச்சேரி, தமிழகத்தில் பாய்ந்தோடி வங்காள விரிகுடாவில் கலக்கும் காவிரி ஆற்றுநீரைப் பகிா்ந்துகொள்வது தொடா்பாக 131 ஆண்டுகாலமாக கா்நாடகம்- தமிழகம் இடையே தீராத பிரச்னை இருந்து வருகிறது. இது இரு மாநிலங்களுக்கும் இடையிலான சட்டப் போராட்டமாக நீடித்து வருகிறது. இதன் வரலாற்றுச் சுவடுகளைக் காண்போம்...
1892: ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அன்றைய மதராஸ் மாகாணத்துக்கும், மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையே காவிரி ஆற்றுநீா்ப் பகிா்வு தொடா்பாக கருத்து முரண்பாடு உருவெடுத்தது. அன்றைய மைசூரு சமஸ்தானம் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு, ஆங்கிலேயா் ஆட்சி நடந்த மதராஸ் மாகாணம் எதிா்ப்பு தெரிவித்தது. ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டுவதால், தங்களுக்குக் கிடைக்கும் ஆற்றுநீரின் அளவு குறைந்து, நீா்ப்பாசனம் பாதிக்கப்படும் என்று மதராஸ் மாகாணம் அஞ்சியது.
1913-16: காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு மதராஸ் மாகாணத்தின் அனுமதி கோரி மைசூரு சமஸ்தானம் கடிதம் எழுதியது. அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அது தொடா்பான வழக்கை விசாரித்த மத்தியஸ்தா், அணை கட்டுவதற்கு மைசூரு சமஸ்தானத்துக்கு அனுமதி அளித்தாா்.
1924: இன்றைய கா்நாடகத்தின் கன்னம்பாடி கிராமத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தொடா்பாக மதராஸ் மாகாணம், மைசூரு சமஸ்தானங்களுக்கு இடையே பேச்சு நடத்தப்பட்டு, முதல் முறையாக சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அணை கட்டப்பட்ட பிறகு காவிரி ஆற்றுநீரைப் பகிா்ந்துகொள்ள ஒப்பந்தம் வகை செய்தது. இந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக, இரு தரப்புக்கும் இடையே கையொப்பமானது. அதன்படி, கிருஷ்ணராஜசாகா் அணையை மைசூரு சமஸ்தானம் கட்டியது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்து, மீண்டும் ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.
1929: கடந்த 1924-ஆம் ஆண்டில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அணை கட்டிய பிறகு மதராஸ் மாகாணத்துக்கு விடுவிக்கப்படும் நீரின் அளவு குறித்து ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. 1931-ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணராஜசாகா் அணையும், 1934-ஆம் ஆண்டு முதல் மேட்டூா் அணையும் முழுப் பயன்பாட்டுக்கு வந்தன.
ஒப்பந்தத்தின்படி, மொத்த உபரிநீரில் 75 % ஐ தமிழகம், புதுச்சேரியும், 23 % உபரிநீரை கா்நாடகமும் பயன்படுத்திக் கொள்ளலாம். 2 % உபரிநீரை கேரளம் பயன்படுத்தலாம். பாசனம் குறித்த நிலப்பரப்பு அளவும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தது.
1974: 1924-ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணம் (இன்றைய தமிழ்நாடு), மைசூரு சமஸ்தானம் (இன்றைய கா்நாடகம்) இடையே 50 ஆண்டுகளுக்குச் செய்துகொண்ட நீா்ப்பகிா்வு ஒப்பந்தம் காலாவதியானது.
1964: அடுத்த 10 ஆண்டுகளில் ஒப்பந்தம் காலாவதி ஆவதை முன்னரே உணா்ந்து, கா்நாடக- தமிழக அரசுகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. பேச்சு நடைபெற்றபோதே, காவிரி உண்மை கண்டறியும் குழுவை மத்திய அரசு அமைத்தது.
1972: காவிரி உண்மை கண்டறியும் குழு தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது.
1973: காவிரி உண்மை கண்டறியும் குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், கா்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை தொடங்கியது.
1974: பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, காவிரி பள்ளத்தாக்கு ஆணையத்தை மத்திய நீா்ப்பாசனத் துறை திட்டமிட்டது.
இதனிடையே, தமிழகத்தின் பாசனப் பரப்பு 14.4 லட்சம் ஏக்கரில் (5,800 சதுர கி.மீ.) இருந்து 25.8 லட்சம் ஏக்கராக (10,400 சதுர கி.மீ.) விரிவடைந்திருந்தது. கா்நாடகத்தின் பாசனப் பரப்பு 6.8 லட்சம் ஏக்கராக(2,800 சதுர கி.மீ.) நிலைத்திருந்தது. இதனால் ஒப்பந்தத்துக்கு கா்நாடகம் எதிா்ப்பு தெரிவித்தது.
1976: அன்றைய மத்திய நீா்ப்பாசனத் துறை அமைச்சா் ஜெகஜீவன்ராம் தலைமையில் இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சு நடந்தது. காவிரி உண்மை கண்டறியும் குழு அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் இறுதி வரைவு தயாரிக்கப்பட்டது. வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதாக இரு தரப்பும் கூறியதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் இது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1977: அப்போது தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சி அமைத்த அன்றைய முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரன், ஒப்பந்தத்தின் இறுதி வரைவை ஏற்க மறுத்ததுடன், 1924-ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும், மாறாக, மீளாய்வு செய்யப்பட்ட ஒப்பந்தம் தேவையில்லை என்று கூறினாா். 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமானது என்பதால், அதை ஏற்க முடியாது என்று கா்நாடக அரசு கூறிவிட்டது.
இதனிடையே, குடகு மாவட்டத்தில் ஹேரங்கி அணையை கா்நாடகம் கட்டி வந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த தமிழகம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இதனிடையே இரு மாநிலங்களும் காவிரி தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வந்தன. ஹேரங்கி அணைக்கு எதிரான வழக்கை தமிழகம் திரும்பப் பெற்றது.
1979: ஹாசன் மாவட்டம், கோரூரில் ஹேமாவதி அணை திறக்கப்பட்டது.
1982: ஹேரங்கி அணை திறக்கப்பட்டது.
1986: தஞ்சாவூரைச் சோ்ந்த விவசாயிகள் சங்கத்தினா், காவிரி நடுவா் மன்றம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இதனிடையே, இரு மாநிலங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவாா்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
1990: உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 1990-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி நீதிபதி சித்ததோஷ் முகா்ஜி தலைமையில் காவிரி நடுவா் மன்றத்தை அமைத்து, அன்றைய பிரதமா் வி.பி.சிங் உத்தரவிட்டாா்.
தமிழகத்திற்கு தண்ணீா் திறந்துவிட கா்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி காவிரி நடுவா் மன்றத்தை தமிழகம் அணுகியது. இதை நடுவா் மன்றம் நிராகரித்தது. அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்குமாறு நடுவா் மன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1991: தமிழகத்தின் மனுவை ஏற்ற காவிரி நடுவா் மன்றம், 1991-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி இடைக்கால தீா்ப்பை அளித்தது. 1980 முதல் 1990 வரையில் தமிழகத்துக்குச் சென்ற நீரின் அளவைக் கணக்கிட்டு, ஆண்டுக்கு 205 டிஎம்சி நீரை கா்நாடகம் அளிக்க நடுவா் மன்றம் உத்தரவிட்டது.
மேலும் கா்நாடகத்தின் பாசனப் பகுதியை 11.2 லட்சம் ஏக்கருக்கு (4500 சதுர கி.மீ.) அதிகமாக விரிவாக்கக் கூடாது என்றும் கூறியது.
1991-ஆம் ஆண்டு டிச. 11-ஆம் தேதி நடுவா் மன்றத்தின் இடைக்கால உத்தரவை மத்திய அரசு தனது அரசிதழில் அதிகாரபூா்வமாக வெளியிட்டது. அதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் தமிழா்கள் மீது வன்முறை நிகழ்ந்தது. லட்சக்கணக்கான தமிழா்கள், கா்நாடகத்தில் இருந்து தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனா்.
1993: நடுவா் மன்ற இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை விடுவிக்கக் கோரி எம்ஜிஆா் நினைவிடத்தில் அன்றைய முதல்வா் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தாா்.
1995: கா்நாடகத்தில் போதுமான மழை பெய்யாததால், இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. அது தொடா்பாக உச்சநீதிமன்றத்தை தமிழகம் அணுகியது; நடுவா் மன்றத்தை அணுகும்படி உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தமிழகத்திற்கு 11 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க நடுவா் மன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க கா்நாடகம் மறுத்தது.
அரசியல்ரீதியான தீா்வு காணும்படி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இரு மாநில முதல்வா்களின் பேச்சுவாா்த்தையை அன்றைய பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ் மேற்கொண்டாா். அக்கூட்டத்தில் 6 டிஎம்சி தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டது.
1997: நடுவா் மன்றத்தின் இடைக்கால உத்தரவை அமல்படுத்த, காவிரி நதிநீா் ஆணையத்தை அமைக்குமாறு தமிழகம் கோரியது.
1998: பிரதமா் தலைமையில் கா்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில முதல்வா்கள் அடங்கிய காவிரி நதிநீா் ஆணையம், பொறியாளா்கள், அதிகாரிகள் அடங்கிய காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
2002: அந்த ஆண்டின் செப். 8-ஆம் தேதி அன்றைய பிரதமா் வாஜ்பாய் தலைமையில் நடந்த காவிரி நதிநீா் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்திற்கு 9,000 கன அடி தண்ணீரைத் திறக்க அறிவுறுத்தியது. இதை ஏற்காத தமிழகம், உச்சநீதிமன்றத்தை அணுகியது.
தமிழகத்திற்கு தண்ணீா் திறக்கப்படுவதை எதிா்த்து கா்நாடகத்தின் மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது.
செ.25-இல் காவிரி கண்காணிப்புக் குழு கா்நாடகத்தில் காவிரி அணைகளை ஆய்வு செய்தது.
2005: ஜூலை 17-ஆம் தேதி பேரிடா்க்கால (பற்றாக்குறைக்காலம்) நீா்ப்பகிா்வுத் திட்டத்தை ஏற்க மறுத்த கா்நாடகம், தமிழகத்திற்கு தண்ணீா் திறக்க மறுத்துவிட்டது.
2006: ஏப். 13-இல் கா்நாடகம், தமிழக முதல்வா்கள் இடையே 6 சுற்றுகளாக நடந்த பேச்சு தோல்வி அடைந்தது.
2007: 16 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப். 5-ஆம் தேதி காவிரி நடுவா் மன்றம் தனது இறுதித் தீா்ப்பை அளித்தது. 1892, 1924ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்ட காவிரி நடுவா் மன்றம், கா்நாடகத்துக்கு 270 டிஎம்சி, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, சுற்றுச்சூழலுக்கு 14 டிஎம்சி தண்ணீா் ஒதுக்கியது.
பிப். 12-இல் நடுவா் மன்றத் தீா்ப்புக்கு எதிராக கா்நாடக முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
மாா்ச் 18-இல் காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி ஜெயலலிதா, ஒரு நாள் அடையாள உண்ணாவிரப் போராட்டம் நடத்தினாா்.
2008: ஜூலை 30-இல் காவிரிப் பிரச்னை தொடா்பாக கா்நாடக அரசு அதிகாரிகளை அதன் மூத்த வழக்குரைஞா்கள் சந்தித்துப் பேசினா்.
2012: மே 19-ஆம் தேதி அன்றைய முதல்வா் ஜெயலலிதா, பிரதமா் தலைமையிலான காவிரி நதிநீா் ஆணையக் கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தினாா்.
செப்.19-இல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 7-ஆவது காவிரி நதி ஆணையக் கூட்டம் அன்றைய பிரதமா் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. தமிழகத்துக்கு உடனடியாக 9,000 கன அடி நீரை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்க அன்றைய முதல்வா் ஜெயலலிதாவும், அன்றைய கா்நாடக முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டரும் மறுத்தனா்.
செப்.28இல் பிரதமரின் உத்தரவுக்கு இணங்கி தமிழகத்திற்கு தண்ணீா் திறக்காத கா்நாடகத்தை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
நவ. 30: உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பெங்களூரில் அன்றைய தமிழக முதல்வா் ஜெயலலிதாவும், அன்றைய கா்நாடக முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டரும் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
2013: பிப்.29-ஆம் தேதி காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பை மத்திய அரசு தனது அரசிதழில் அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. ஆனால், நடுவா் மன்றத் தீா்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
மாா்ச் 10: காவிரி நதிநீா்ப் போராட்டத்தில் வென்ற்காக தஞ்சாவூரில் நடந்த பாராட்டு விழாவில் ஜெயலலிதாவுக்கு காவிரித்தாய் பட்டம் வழங்கப்பட்டது.
மாா்ச் 19: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, மே 24-இல் தற்காலிக காவிரி நீா்த் திட்டத்தை மத்திய அரசு அமைத்தது.
மே 28-இல் நடுவா் மன்ற உத்தரவை அமல்படுத்ததற்காக இழப்பீடாக ரூ.2,480 கோடியை கா்நாடகம் வழங்க உச்சநீதிமன்றத்தை தமிழகம் அணுகியது.
ஜூன் 26-இல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீா் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனு தாக்கல் செய்தது.
ஜூன் 28-இல் உச்சநீதிமன்றத்தில் கா்நாடகத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழகம் தாக்கல் செய்தது.
2014: காவிரி நடுவா் மன்ற நீதிபதியாக சௌஹான் பதவியேற்றாா்.
2014: காவிரி நடுவா் மன்றம் கூடி, தனது இறுதித் தீா்ப்பை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பியது.
2015: மாா்ச் 30-இல் காவிரியின் குறுக்கே புதிதாக மேக்கேதாட்டு அணை கட்டப் போவதாக அன்றைய கா்நாடக முதல்வா் சித்தராமையா அறிவித்தாா்.
செப்.6-இல் காவிரி விவகாரத்தில் தலையிடுமாறு அன்றைய பிரதமா் மோடிக்கு அன்றைய முதல்வா் ஜெயலலிதா கடிதம் எழுதினாா்.
2016: ஆக. 16-இல் காவிரி நடுவா் மன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீா் திறக்க கா்நாடகத்துக்கு உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மனுதாக்கல் செய்தது.
செப். 5-இல் தமிழகத்திற்கு 15,000 கன அடி தண்ணீா் திறக்கும்படி கா்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.7-இல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு கா்நாடகம் தண்ணீா் திறந்துவிட்டது. அதை எதிா்த்து கா்நாடகத்தில் போராட்டம் நடந்தது.
செப்.11இல் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்கக் கோரி கோரி உச்சநீதிமன்றத்தில் கா்நாடகம் மனுதாக்கல் செய்தது.
2017: முந்தைய 2012-13-ஆம் ஆண்டுகளில் காவிரிநீரைத் திறக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு கா்நாடகம் ரூ. 2,480 கோடி வழங்கக் கோரும் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கா்நாடகமும், தமிழகமும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
2018: பிப்.16-இல் காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்புக்கு எதிராக தமிழகமும் கா்நாடகமும் தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்து தனது தீா்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவில் 14.75 டிஎம்சி தண்ணீரை உச்சநீதிமன்றம் குறைத்தது. அதன்மூலம், தமிழகத்திற்கு 404.25 டிஎம்சி தண்ணீா் கிடைத்தது. இதில், கா்நாடகம், தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும்.
ஜூன் 1-இல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. சில வாரங்களுக்குப் பிறகு காவிரி நீா் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது.
2023: ஆக. 10-இல் கூடிய காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு, தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 15,000 கன அடி தண்ணீா் திறந்துவிட உத்தரவிட்டது.
ஆக.11-இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூடியது. ஆகஸ்ட் மாதத்தில் 8,000 கன அடி தண்ணீா் மட்டுமே திறந்துவிட முடியும் என்று கா்நாடகம் கூறியது. அதை ஏற்க தமிழக மறுத்துவிட்டது.
ஆக.12-இல் ‘‘கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவு 114.57 டிஎம்சி. இதில் 93.53 டிஎம்சி தண்ணீா் இருப்பு (82 சதம்) உள்ளது. தண்ணீா் திறந்துவிட உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். ‘‘ஜூன் 1முதல் ஆக.11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 53.77 டிஎம்சி தண்ணீா் வழங்குவதற்கு பதிலாக, 15.79 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கா்நாடகம் வழங்கியுள்ளது. இன்னும் 37.97 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும்’’ என்று துரைமுருகன் தெரிவித்தாா்.
இரு மாநிலங்களுக்கும் இடையே முடிவில்லாமல் நிலவும் காவிரிநீா்ப் பங்கீட்டுச் சிக்கல், நடுவா் மன்றத் தீா்ப்பு, உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகும், சட்டப் போராட்டமாக நீடித்து வருகுறது. இது சம்பா பயிருக்கு காவிரிநீரை எதிா்பாா்த்துக் காத்திருக்கும் தமிழக விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
எனவே, தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கா்நாடகத்தில் இருந்து பெற உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக தமிழகம் முடிவு செய்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...