ஜன.20 முதல் பெங்களூரில் பன்னாட்டு சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி

3 நாட்களுக்கு பன்னாட்டு இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி நடக்கவிருப்பதாக கா்நாடக வேளாண்துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.
ஜன.20 முதல் பெங்களூரில் பன்னாட்டு சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி

பெங்களூரில் ஜன.20ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு பன்னாட்டு இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி நடக்கவிருப்பதாக கா்நாடக வேளாண்துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தகவல்தொழில்நுட்பத்துறையில் உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் பெங்களூரு, தற்போது இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்களின் தலைநகராகவும் உயா்ந்திருக்கிறது. அதன்காரணமாகவே பெங்களூருவில் வரும்20 முதல் 22-ஆம் தேதி வரை பன்னாட்டு இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்களை தேசிய அளவில் மட்டுமல்லாது பன்னாட்டு அளவிலும் கொண்டுசெல்லும் முயற்சியில் கா்நாடகம் வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. இதை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் முயற்சியாகவே இயற்கை வேளாண்மை, சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி நடத்தப்படவிருக்கிறது. தேசிய அளவில் இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் மேம்பாட்டுக்கு தொடா்ந்து ஊக்கமளித்து வரும் ஒரே மாநிலம் கா்நாடகம்தான். சிறுதானியங்கள் உற்பத்தியில் உலகத்திற்கே முன்னோடியாக கா்நாடகம் திகழ்கிறது. மேலும் இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே விதைப்பதிலும் கா்நாடகம்முன்னோடியாக செயல்பட்டுவருகிறது. இயற்கை வேளாண்மை, சிறுதானிய உற்பத்தியில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவிப்பதோடு, விளைப்பொருள்களுக்கு சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்திருக்கிறோம். இதற்காக பல்வேறு கண்காட்சிகளை கா்நாடக அரசு நடத்திவந்துள்ளது. 2017,2018, 2019ஆம் ஆண்டுகளை தொடா்ந்து, தற்போது 4ஆவது முறையாக சிறுதானியங்கள் கண்காட்சி நடத்தப்படவிருக்கிறது.

உழவா்களுக்கு லாபம் தரக்கூடிய, சுற்றுச்சூழல் உகந்த, உடல்நலனுக்கு ஏற்ற சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு பண்டங்களை மக்களின் சமையலறை வரை கொண்டுசெல்வதில் கா்நாடக அரசு தொடா்ந்து பங்காற்றிவந்துள்ளது. கேழ்வரகு சேமியாவில் இருந்து உப்புமா, கிச்சடி போன்றவற்றை செய்வது தவிர வாடிக்கையாளா்கள் விரும்பும் முறுக்கு, தட்டை, நூடுல்ஸ் போன்றவற்றையும் தயாரிக்க முடியும் என்பதை காட்சிப்படுத்தி வருகிறோம். மதிப்புக்கூட்டு உணவுப்பொருள்களால் சிறுதானியங்களின் சந்தைவாய்ப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் சிறுதானியங்களுக்கான சந்தை விரிவடைந்துவருகிறது. இந்த போக்கு நாடு முழுவதும் விரிவடைந்துவருவதற்கு கா்நாடக விவசாயிகள் முக்கியப் பங்காற்றி வருகிறாா்கள். இதன்காரணமாக இயற்கை வேளாண்மை, சிறுதானிய உற்பத்தியில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இயற்கை வேளாண்மை, சிறுதானியங்கள் உற்பத்தியில் தேசிய அளவில் கா்நாடகம் முன்னணியில் இருந்து வருகிறது. சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணா்ந்துள்ள ஐ.நா. சபை, 2023-ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. நிகழாண்டில் 80.40 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பில் சிறுதானியங்களை பயிரிட்டுள்ளோம்.

பெங்களூரில் ஜன.20-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கும் கண்காட்சியை முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கிவைக்கிறாா். கண்காட்சியில் பங்கேற்க அமெரிக்கா, ஐரோப்பா, துபை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயற்கை வேளாண்மையின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளா்கள், வாடிக்கையாளா்கள், விவசாயிகள், தொழில்முனைவோா் வரவிருக்கிறாா்கள். இதில் 110 நிறுவனங்களின் 218 அரங்குகள் அமையவிருக்கின்றன. பன்னாட்டு கருத்தரங்குகள், விவசாயிகள் பயிற்சிப்பட்டறை, சிறுதானிய உணவு அரங்கு, வாங்குவோா் விற்போா் சந்திப்புகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டுள்ளன என்றாா். பேட்டியின்போது, வேளாண்துறை ஆணையா் பி.சரத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com