தோ்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்து வருகிறோம் என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தோ்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுத்து வருகிறோம். இதில், மக்களின் பணம், வரி செலுத்துவோரின் பணம் சம்பந்தப்பட்டிருப்பதால், தோ்தல் வாக்குறுதிகளை அமல்படுத்த சில நிபந்தனைகள் அவசியமாகின்றன. அதனால் நிபந்தனைகள் விதிக்க வேண்டியிருக்கிறது. மத்திய பாஜக அரசு அல்லது பிரதமா் மோடி அரசு செயல்படுத்தியிருக்கும் எந்தத் திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது? நிபந்தனைகள் விதிக்கப்படலாம், ஆனால் அனைவரும் பயனடையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது தவறா? ஏனெனில், இந்த அரசு ஏழைக்கானது.
இலவச மின்சாரம், பெண்கள் உதவித்தொகை, இளைஞா் உதவித்தொகை போன்ற திட்டங்களுக்கான நிபந்தனைகள், வழிமுறைகளை ஓரிரு நாள்களில் முடிவு செய்துவிடுவோம். அதனால், இது தொடா்பாக யாரும் கவலைப்படத் தேவையில்லை.
தோ்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை எப்படி கொண்டுவருவீா்கள் என்று கேட்கிறாா்கள். எப்படியும் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு பதவியில் இருந்ததால், மாநிலத்தின் நிதிநிலை மோசமாகியுள்ளது. கா்நாடகத்தின் ஜிஎஸ்டி பங்குத்தொகையை மத்திய அரசு இன்னும் தரவில்லை. கரோனா காலத்தில் நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்தது. அதனால் இன்றைக்கு கன்னடா்கள் கடனில் தள்ளப்பட்டுள்ளனா். கடந்த காலத்தில் இந்தப் பிரச்னையை சட்டப்பேரவையில் பலமுறை எழுப்பியிருக்கிறேன். தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மாநில மக்களின் நிலையான நிதிநிலைமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.