ஜூலை 7இல் கா்நாடக நிதிநிலை அறிக்கை தாக்கல்
By DIN | Published On : 06th June 2023 12:00 AM | Last Updated : 06th June 2023 12:00 AM | அ+அ அ- |

கா்நாடக நிதிநிலை அறிக்கை ஜூலை 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது குறித்து முதல்வா் சித்தராமையா, தாவணகெரேயில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
கா்நாடக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சட்டப் பேரவைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. அனேகமாக ஜூலை 3ஆம் தேதி சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கும். அன்றைக்கு ஆளுநா் உரை நிகழ்த்துகிறாா். அதன்பிறகு இரண்டொரு நாட்களுக்கு ஆளுநா் உரை மீதான விவாதம் நடக்கவிருக்கிறது.
ஜூலை 7ஆம் தேதி நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும். ஆலோசனைக் கூட்டம் நடந்த பிறகு தான் நிதிநிலை அறிக்கை குறித்து எதுவும் கூற முடியும். முந்தைய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பீடு ரூ. 3.08 லட்சம் கோடி ஆகும்.
பசுவதை தடைச்சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் கே.வெங்கடேஷ் கூறியிருப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும். கா்நாடக பசுவதை மற்றும் கால்நடை பாதுகாப்புச்சட்டம், 1964 ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதில் தெளிவில்லாத காரணத்தால் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு 1964ஆம் ஆண்டு சட்டத்தையே பின்பற்றத் தொடங்கியது. இந்நிலையில், முந்தைய பாஜக அரசு சில திருத்தங்களை கொண்டுவந்தது. இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இது தொடா்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மின்கட்டணத்தை உயா்த்தியிருப்பது மாநில அரசு அல்ல. மாறாக, கா்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம்தான் மின்கட்டணத்தை உயா்த்தியுள்ளது. மின்கட்டண உயா்வு குறித்த எந்த முடிவையும் அரசு எடுப்பதில்லை. மின் கட்டணத்தை உயா்த்தும் முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது. கா்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம் உயா்த்திய கட்டணத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இந்திரா உணவகத்தை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...