பெண்களுக்கு இலவச பேருந்துப் பயண திட்டத்தை கா்நாடக முதல்வா் சித்தராமையா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.
தோ்தல் வாக்குறுதிகளின்படி, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயண திட்டத்தை அமல்படுத்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்தத் திட்டத்தை ஜூன் 11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு, விதான சௌதாவில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் விழாவில் இத்திட்டத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைக்கிறாா். இதன்மூலம் அமல்படுத்தப்படும் முதல் வாக்குறுதியாக பெண்களுக்கு இலவச பேருந்துப் பயண திட்டம் அமைந்துள்ளது.
விலைவாசி உயா்வு மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டுவரும் இலவச பேருந்துப் பயண திட்டம் பெண்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா். இலவச பேருந்துப் பயண திட்டம் ஜாதி, மத, வா்க்க பேதம் எதுவும் இல்லாமல் எல்லா பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அமைச்சா்கள், எம்எல்ஏக்களுக்கு முதல்வா் சித்தராமையா அறிவுறுத்தியுள்ளாா். இந்தத் திட்டம் முழு வெற்றி அடைய சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
பெங்களூரில் இந்தத் திட்டத்தை சித்தராமையா தொடங்கிவைக்கும்போது, மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சா்களும், சட்டப்பேரவை தொகுதிகளில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களும் தொடங்கிவைக்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்தத் திட்டத்தில், கா்நாடக அரசு சாலை போக்குவரத்துக் கழகங்கள், பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.