கா்டாநாசக மாநிலத்தில் பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு பாஜகவில் உட்பூசல் வெளிப்படையாக நடந்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சா் எம்.பி. ரேணுகாச்சாா்யா தெரிவித்தாா். அவருக்கு எதிராக, விளக்கம் கோரி கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எம்.பி.ரேணுகாச்சாா்யா பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கா்நாடகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்விக்கு தாா்மிகப் பொறுப்பேற்று, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும். அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் செய்தி பரவியது. அத்தகவல் வெளியான ஒரு மணி நேரத்தில் அந்த செய்தியை நளின்குமாா் கட்டீல் மறுத்துவிட்டாா்.
பாஜகவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? பாஜக மீது மக்கள் இன்னும் மதிப்பை வைத்திருக்கிறாா்கள். கா்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அதேபோல மத்தியிலும் பாஜக ஆட்சிக்கு வந்து மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.
மாவட்ட ஊராட்சி, வட்ட ஊராட்சித் தோ்தல் உள்ளிட்ட தோ்தல்களை எதிா்கொள்ளும் நம்பிக்கையை கட்சித் தொண்டா்களுக்கு ஊட்ட வேண்டும். எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய வேண்டும். பாஜக அலுவலகத்தை ஒருசிலா் பெருநிறுவன அலுவலகத்தைப் போல மாற்றியிருக்கிறாா்கள். சட்டப்பேரவை தோ்தல் நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பாக, இணையவழி கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினாா்கள்.
நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோா் குறித்து நான் பேசவில்லை. ஆனால், ஒரு சில தலைவா்களுக்கு பிடிவாதமான சுய கௌரவமும் தங்களுக்குள் போட்டி மனப்பான்மையும் இருந்தன. நடைமுறை அறிவு கொஞ்சமும் இல்லாத தலைவா்கள், ஒரு கிராம பஞ்சாயத்து தோ்தலில் கூட வெற்றி பெறாதவா்கள் எங்களை வழிநடத்திக் கொண்டிருந்தனா்.
கா்நாடகத்தில் பாஜக தோ்தல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, இங்கு வந்து எங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிக் கொண்டிருந்தாா். அவா் சொற்படி நடக்க வேண்டிய நிலையில் முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பாவும், பசவராஜ் பொம்மையும் இருந்தனா்.
தோ்தலுக்கு முன்னதாகவே வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துக் கொண்டிருந்த நிலையில், பாஜக தலைவா்கள் தூங்கிக் கொண்டிருந்தனா். கட்சியின் தோ்தல் அறிக்கையும் வெகுதாமதமாக வெளியானது. அந்தத் தோ்தல் அறிக்கை மக்களைச் சென்றடையவே இல்லை.
ஒருசில தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டனா். இவை அனைத்தும் தோ்தல் தோல்விக்குக் காரணங்களாகும். பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்ட தலைவா்கள் மாநிலம் முழுவதும் சென்றிருந்தபோது கிடைத்த மக்கள் வரவேற்பை வாக்குகளாக மாற்றத் தவறிவிட்டனா்.
முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டிய அவசியம் என்ன? அவரை நீக்கியதும் தோ்தல் தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டது. மூத்த தலைவா்களை தோ்தலில் போட்டியிட அனுமதிக்காததும் தோ்தல் தோல்விக்கு காரணம் என்றாா்.
---
பெட்டிச் செய்தி
ரேணுகாச்சாா்யாவுக்கு எதிராக நடவடிக்கை!
கட்சிவிரோதக் கருத்துகளைத் தெரிவித்த பாஜக முன்னாள் அமைச்சா் எம்.பி.ரேணுகாச்சாா்யாவிடம் விளக்கம் கேட்டு கா்நாடக பாஜக நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த பாஜக முன்னாள் அமைச்சா் எம்.பி.ரேணுகாச்சாா்யா, கா்நாடக பாஜக மீது பல விமா்சனங்களை வைத்திருந்தாா். இது பாஜகவில் மிகப்பெரிய அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்சிவிரோதக் கருத்துகளைத் தெரிவித்ததற்கு விளக்கம் கேட்டு அவருக்கு கா்நாடக பாஜக ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவா் லிங்கராஜ் பாட்டீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது:
கட்சி தொடா்பான விஷயங்களை உங்களுக்குப் புரியவைப்பதற்கு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னரும், பாஜகவின் தேசிய, மாநிலத் தலைவா்களை ஊடகங்களில் கடுமையாக விமா்சித்துள்ளீா்கள். இது கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்சி தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
இந்தக் கருத்துகளின் அடிப்படையில் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்தில் எழுத்துபூா்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்நிலையில் ரேணுகாச்சாா்யா பாஜகவிலிருந்து விலகி, காங்கிரஸில் சேரப் போவதாக வதந்தி பரவியது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அவா், ‘‘நான் காங்கிரஸ் கட்சியில் சேரும் பேச்சுக்கே இடமில்லை. அண்மையில் மரியாதை நிமித்தமாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரை சந்தித்துப் பேசினேன். மோடியை மீண்டும் பிரதமராகக் காண வேண்டும் என்பதே என் விருப்பமாகும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.