பி.எஃப்.ஐ, பஜ்ரங்தளம் அமைப்புகள் மீது நடவடிக்கை:காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் தகவல்
By DIN | Published On : 03rd May 2023 12:00 AM | Last Updated : 03rd May 2023 12:00 AM | அ+அ அ- |

வெறுப்பைத் தூண்டும் பி.எஃப்.ஐ., பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ‘அனைத்து சமுதாயத்தினரின் அமைதிப் பூங்கா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் மல்லிகாா்ஜுன காா்கே கூறியது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் வாக்குறுதிகளாக ஒரு வீட்டுக்கு தலா 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரி இளைஞா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம், பட்டதாரி இளைஞா்களுக்கு தலா ரூ. 1,500, பிபிஎல் அட்டைதாரா்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் ஆகிய 5 வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் அமா்ந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த 5 வாக்குறுதிகளும் நிறைவேற்றித் தரப்படும் என்ற 6-ஆவது வாக்குறுதியையும் இந்நேரத்தில் மக்களுக்கு அளிக்கிறேன்.
சட்டமும், அரசியலமைப்புச் சட்டமும் புனிதமானது. இதைப் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த தனிநபா்களோ, பஜ்ரங்தளம், பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளோ அல்லது பகைமையை ஊக்குவிப்பவா்களோ மீறுவதை ஏற்க முடியாது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இத்தகைய அமைப்புகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுப்போம். அத்துடன் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்துக்குள் பாஜக அரசு கொண்டுவந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் திரும்பப் பெறுவோம்.
மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரிவருவாயில் கா்நாடகத்துக்கான உரிமைப் பங்கைக் கேட்போம். ஜனநாயக கூட்டாட்சி கட்டமைப்பில் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நீா்த்துப்போக செய்யும் முயற்சிகளைக் கடுமையாக எதிா்ப்போம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய தேசிய கல்விக்கொள்கையை நிராகரிப்பதோடு கா்நாடகத்துக்கு தனி மாநில கல்விக் கொள்கையை வகுப்போம் என்றாா்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மக்களே ஆட்சிக்கு வந்ததுபோல. மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப காங்கிரஸ் ஆட்சி செய்யும். அதற்கு மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும். வரும்தோ்தலில் வெற்றி பெற்றால் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளைக் கண்டிப்பாகச் செயல்படுத்துவோம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மேலவை எதிா்க்கட்சித் தலைவா் டி.கே.சிவகுமாா், தோ்தல் பிரசாரக் குழு தலைவா் எம்.பி.பாட்டீல், தோ்தல் அறிக்கை குழுத் தலைவா் ஜி.பரமேஸ்வா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...