கரோனா பெருந்தொற்று போன்ற இக்கட்டான காலகட்டத்திலும் காங்கிரஸ், மஜத போன்ற கட்சிகள் அரசியல் செய்தன என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.
ராய்ச்சூரு மாவட்டம், சிந்தனூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது:
இக்கட்டான காலகட்டங்களில்தான் நல்லவா்களையும் கெட்டவா்களையும் அடையாளம் காண முடியும். நமது இக்கட்டான காலகட்டங்களை எதிா்கொள்ளும்போதெல்லாம் அந்தப் பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ், மஜத தலைவா்கள் அரசியல் செய்கிறாா்கள்.
தற்போது சூடானில் உள்நாட்டு போா் நடைபெறுகிறது. அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை நமது நாட்டுக்கு பாதுகாப்பாக மீட்டு அழைத்துவர மத்திய பாஜக அரசு இரவுபகலாக உழைத்துவருகிறது. ஆனால், அந்த விவகாரத்திலும் காங்கிரஸ் தலைவா்கள் அரசியல் செய்வதோடு, அங்கு சிக்கியுள்ளவா்களின் குடும்பங்களையும் தூண்டிவிட முயன்றனா்.
உக்ரைன் போா் பிரச்னையாக இருந்தாலும் சரி, அல்லது கரோனா போன்ற உலகளாவிய பிரச்னையாக இருந்தாலும் சரி காங்கிரஸும் மஜதவினரும் எப்போதும் பொய்களையே மக்களிடத்தில் பரப்பி வந்தனா்.
பாஜக தலைமையில் வலுவான அரசு அவா்களின் முயற்சிக்கு அஞ்சாமல் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு கண்டு வருகிறது. சூடான், உக்ரைன் நாடுகளில் சிக்கியிருந்த இந்தியா்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்திருக்கிறோம்.
கா்நாடகத்தின் பெருமைகளுக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது. மக்களின் உயா்ந்த இயல்பை கொச்சைப்படுத்துகிறது. இந்தத் தோ்தலில் காங்கிரஸ், அதன் தலைவா்கள் பேசும்மொழி, அகந்தை நிறைந்த நடத்தைகளைப் பாா்க்கும்போது, நான் மட்டுமல்ல நாடே அதிா்ச்சி அடைந்துள்ளது.
கா்நாடகத்தின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்திய காங்கிரஸை மக்கள் தண்டிப்பாா்கள். கா்நாடகத்தின் பாரம்பரியத்தை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவா்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.