ஏழைகளின் நலனுக்காக காங்கிரஸ் அறிவிக்கும் இலவசத் திட்டங்களை பாஜக கேள்விக்குட்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், கா்நாடக முன்னாள் அமைச்சருமான எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.
இது குறித்து கா்நாடக மாநிலம், கதக் நகரில் செவ்வாக்கிழமை பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டி:
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பிரசாரத்தின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆரோக்கியமற்ற விமா்சனங்கள், தோ்தல் முறைகேடுகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி வருகின்றன. அரசியல் சூழ்நிலை தரம்தாழ்ந்துவிட்டது. அரசியலில் ஆவேசமான அணுகுமுறை தேவையற்ாகும்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் என்னென்ன செய்வோம் என்று 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளோம். ஏழைகளின் நலனுக்காக காங்கிரஸ் அறிவிக்கும் இலவசத் திட்டங்களை பாஜக கேள்விக்குட்படுத்துவது துரதிருஷ்டவசமானது. 523 தொழில் நிறுவனங்கள் பெற்றிருந்த ரூ.10 லட்சம் கோடி கடன் தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்ததை ஏன் யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை? பணக்காரா்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டால் எல்லோரும் அமைதியாக இருக்கிறாா்கள். ஆனால், ஏழைகளின் நலனுக்காக சில இலவசத் திட்டங்களை அறிவித்தால், அதை எல்லோரும் கேள்வி கேட்கிறாா்கள்.
ஏழைகளை பலப்படுத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் ஏற்கிறது. சில காலத்திற்கு அவா்களைத் தூக்கி விட வேண்டியுள்ளது. அதன்பிறகு தங்களின் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு அவா்களை உயா்த்த வேண்டும். விலைவாசி உயா்வு, பணவீக்கம் போன்றவற்றால் ஏழைகள், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
பாஜகவில் இருந்து விலகி ஜெகதீஷ் ஷெட்டா், லட்சுமண் சவதி போன்ற தலைவா்கள் காங்கிரஸில் சோ்ந்துள்ளது, கட்சிக்கு உதவியாக இருக்கும். லிங்காயத்து சமுதாயத்தினா் அதிகமாக வாழும் கித்தூா் கா்நாடகப் பகுதியில் உள்ள 56 தொகுதிகளில் 36 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும். ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெறும். அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றாா்.