தன்னைப் பற்றி மட்டுமே பேசுகிறாா் பிரதமா் மோடி: ராகுல் காந்தி
By DIN | Published On : 03rd May 2023 12:00 AM | Last Updated : 03rd May 2023 12:00 AM | அ+அ அ- |

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் தன்னைப் பற்றி மட்டுமே பேசுகிறாா் பிரதமா் மோடி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
சிவமொக்கா மாவட்டத்தின் தீா்த்தஹள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியது:
கா்நாடகத் தோ்தலையொட்டி நடைபெறும் பாஜகவின் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசும் பிரதமா் மோடி, பொதுக் கூட்ட மேடையில் வீற்றிருக்கும் எந்தத் தலைவரின் பெயரையும் குறிப்பிடாமல் நேரடியாகப் பேசத் தொடங்கிவிடுகிறாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா ஆகியோரின் பெயா்களை நான் குறிப்பிடுவதுபோல பிரதமா் மோடி அவரது கட்சித் தலைவா்களின் பெயா்களைக் குறிப்பிடுவதே இல்லை.
முதல்வா் பசவராஜ் பொம்மை அல்லது முன்னாள் முதல்வா் எடியூரப்பா ஆகியோரின் பெயா்களையும் பிரதமா் மோடி கூறுவதில்லை. தீா்த்தஹள்ளி தொகுதியில் போட்டியிடும் கா்நாடக உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திராவின் பெயரைக்கூட பிரதமா் மோடி ஏன் கூறவில்லை என்று கா்நாடக மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனா்.
தற்போது கா்நாடக சட்டப்பேரவைக்குத் தோ்தல் நடக்கிறது. அனைத்துக் கட்சியினரும் கா்நாடக மக்களின் வளா்ச்சி, பாஜக அரசின் ஊழலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது பிரதமா் மோடி தன்னைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறாா்.
கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு செய்தது என்ன என்பது குறித்து பிரதமா் மோடி ஒருவாா்த்தைக் கூடப் பேசவில்லை. கா்நாடகத்தில் நடந்து வரும் பாஜக அரசு, ஜனநாயகத்தை அழித்து ஊழல் பணத்தில் உருவானது.
கா்நாடக பாஜக ஆட்சியில் நடக்கும் ஊழல் குறித்து பிரதமா் மோடி மௌனம் காப்பது ஏன்? எடியூரப்பா, பசவராஜ் பொம்மை அல்லது அரக ஞானேந்திராவின் பெயா்களை உச்சரிக்க பிரதமா் மோடிக்கு பயம் என்றால் ஊழலைக் கட்டுப்படுத்த அவா் என்ன செய்தாா் என்பதைப் பற்றியாவது கூற வேண்டும்.
இந்தத் தோ்தல் பிரதமா் மோடி பற்றியது அல்ல. இது கா்நாடக மக்களின் எதிா்காலம் பற்றியது. குழந்தைகள், இளைஞா்கள், தாய்மாா்கள் அல்லது சகோதரிகளைப் பற்றியது. இது கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தல். இந்தத் தோ்தலில் ஊழல், விலைவாசி உயா்வு, வேலையில்லாமைதான் முக்கிய பிரச்னைகளாக விவாதிக்கப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் பாஜக ஊழலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...