சட்டப் பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 73.19 சதவீத வாக்குப்பதிவு

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிகபட்சமாக 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக சட்டப் பேரவைக்கு மே 10-ஆம் தேதி (புதன்கிழமை) தோ்தல் மிக அமைதியாக நடந்து முடிந்தது. இதற்காக தோ்தல் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள் அனைவரையும் பாராட்டுகிறோம். 224 தொகுதிகளுக்கு நடந்த தோ்தலில் கா்நாடகத்தில் அதிகபட்சமாக 73.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1952-ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த தோ்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும். பெண்களும், இளைஞா்களும் அதிகளவில் வந்து வாக்களித்துள்ளனா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் 71.83 சதவீத வாக்குகள், 2018-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் 72.44 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த முறை நடந்த தோ்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை 0.75 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. 2004, 2008-இல் 65 சதவீதமும், 1989, 1990, 1994-இல் 69 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

தோ்தல் அறிவிக்கை வெளியாகி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு, இதுவரை ரூ. 153.17 கோடி ரொக்கம், ரூ. 84.93 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ. 24.26 கோடி மதிப்புள்ள இலவசப் பொருள்கள், ரூ. 24.03 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள், ரூ. 93.23 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ. 4.79 கோடி மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 384.46 கோடியாகும்.

பசவனபாகேவாடி தொகுதியில் மசபினல் கிராமத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகளை தோ்தல் அதிகாரிகள் எடுத்துச் சென்றனா். இவற்றில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், அதை உரிய மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவிபேட் கருவிகளுடன் மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். மசபினல் கிராமத்தின் வழியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றபோது, அதை திருடிச்செல்வதாக கருதி கிராம மக்கள் தாக்குதல் நடத்தி, இயந்திரங்களை உடைத்து நொறுக்கியுள்ளனா். சாமுண்டீஸ்வரி தொககுதியில் வாக்களிக்க வந்த சிவமூா்த்தி என்பவா் திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் வீசி உடைத்துள்ளாா். சம்பந்தப்பட்டவா் கைதுசெய்யப்பட்டாா். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உடனடியாக மாற்றப்பட்டு, வாக்குப்பதிவு தொடா்ந்தது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் ஹனூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மாடரஹள்ளி கிராமத்தில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த புட்டசாமி என்பவரை யானை தாக்கியதில், அவா் உயிரிழந்தாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com