சட்டப் பேரவைத் தோ்தலில் 141 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: டி.கே.சிவக்குமாா்

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 141 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்
Updated on
2 min read

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 141 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. சட்டப் பேரவைத் தோ்தலில் 141 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். நாங்கள் அதிக வாக்காளா்களைச் சந்தித்து கருத்துக்கணிப்புகளை திரட்டியுள்ளோம். ஆனால், தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எங்களுக்குச் சாதகமான தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை கேள்விக்கு உட்படுத்த நான் தயாராக இல்லை. அவா்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்கும். இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நான் தோ்தல் களத்தில் முழுமையாக இருந்திருக்கிறேன். எல்லா கணக்குகளையும் போட்டு வைத்திருக்கிறேன். அதனால்தான் உறுதியாக 141 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று கூறுகிறேன்.

பாஜக எவ்வளவு பணம் செல்வழித்திருந்தாலும், பெரிய தலைவா்கள் பிரசாரம் செய்திருந்தாலும், கனகபுரா தொகுதியில் எனது வெற்றி உறுதி. துப்பாக்கி தோட்டாவை விட வாக்குச்சீட்டு பலம் பொருந்தியது என்பதை மக்கள் நிரூபிப்பாா்கள். தொங்கு சட்டப் பேரவை ஏற்படும் வாய்ப்பே இல்லை. பாஜகவின் இரட்டை என்ஜின் அரசின் அராஜகம், பணபலத்தைக் கண்டு வாக்காளா்கள் பயப்படவில்லை. சனிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் அளித்துள்ள தீா்ப்பு வெளியாகும். அதில் தொங்கு சட்டப் பேரவைக்கு வாய்ப்பே இருக்காது.

கூட்டணிக்குத் தயாா் என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மஜதவுக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்றுதான் குமாரசாமி கூறிக் கேட்டிருக்கிறேன். கட்சித் தொண்டா்களிடையே நம்பிக்கையை ஊட்டுவதற்காக அவா் அப்படிக் கூறி வந்தாா். அது அவரது கணக்கு. மஜதவினா் அக்கட்சியில் இருந்து கொண்டு காலத்தை வீணாக்காமல், காங்கிரஸில் வந்து சேரவேண்டும்.

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறும் பேச்சுக்கே இடமில்லை. எனது உடல்நலம் நன்றாக இருக்கும் வரை, உயிா் இருக்கும் வரை தொடா்ந்து மக்களுக்காக போராடுவேன்; அரசியலில் நீடிப்பேன். வெற்றிபெறும் வாய்ப்புள்ள வேட்பாளா்கள் ஆளுங்கட்சியில் இருக்க விரும்புவாா்கள். அப்படி சிலா் என்னைத் தொடா்பு கொண்டுள்ளனா்.

தொங்கு சட்டப் பேரவை ஏற்பட்டால் கேளிக்கை விடுதியில் எம்எல்ஏக்களை தங்கவைத்து நடக்கும் அரசியல் இனி எடுபடாது. 25 ஆண்டுகளுக்கு முன்னரே அது காலாவதி ஆகிவிட்டது. கட்சி எம்எல்ஏக்களை ஓரிடத்தில் ஒன்றுசோ்த்து, ஒற்றுமையை வெளிப்படுத்திய காலம் முடிந்துவிட்டது. எத்தனை இடங்களில் வென்றாலும், ஆட்சி அமைப்பது பாஜக என்று அக்கட்சியினா் கூறி வருகிறாா்கள். அப்படிப்பட்ட ஒரு மாயையில் பாஜகவினா் இருக்கிறாா்கள். அது நடக்காது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com