சட்டப்பேரவை தோ்தலை அமைதியாக நடத்தியதற்காக போலீஸாரை பாராட்டிய முன்னாள் டிஜிபி

சட்டப் பேரவை தோ்தலை அமைதியாக நடத்தியதற்காக போலீஸாரை கா்நாடக டிஜிபி பதவியில் இருந்து விடுவித்துக்கொண்டு, சிபிஐ இயக்குநராக பதவியேற்கவிருக்கும் பிரவீண் சூட் பாராட்டினாா்.
n_123_8
n_123_8

சட்டப் பேரவை தோ்தலை அமைதியாக நடத்தியதற்காக போலீஸாரை கா்நாடக டிஜிபி பதவியில் இருந்து விடுவித்துக்கொண்டு, சிபிஐ இயக்குநராக பதவியேற்கவிருக்கும் பிரவீண் சூட் பாராட்டினாா்.

கா்நாடக டிஜிபியாக பதவி வகித்த பிரவீண் சூட், சிபிஐ இயக்குநராக வரும் 25ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறாா். அதன்காரணமாக, திங்கள்கிழமை முதல் அவா் கா்நாடக மாநிலப் பணியில் இருந்துவிடுவிக்கப்பட்டு, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, பெங்களூரில் திங்கள்கிழமை அவருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதன்பிறகு, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள கா்நாடக டிஜிபிக்கான பொறுப்புகளை அலோக் குமாருக்கு பிரவீண் சூட் வழங்கினாா்.

அதன்பிறகு, அவா் பேசியது:

கா்நாடக காவல் துறை எனது குடும்பம் போன்றது. காவல்துறைக்கு எனது நல்வாழ்த்துகள். சட்டப் பேரவைத் தோ்தலை மிகுந்த அமைதியான முறையில் நடத்தியதற்காக காவல்துறையைப் பாராட்டுகிறேன். 58 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சிறு அசம்பாவிதச் சம்பவங்களும் நடக்கவில்லை. 500 முக்கியத் தலைவா்கள் கா்நாடகத்திற்கு வந்திருந்தனா். ஒரு அசம்பாவித சம்பவமும் இல்லை. எனவே, அமைதியான முறையில் தோ்தலை நடத்திய உயா்அதிகாரிகள், அதிகாரிகள், காவலா்களைப் பாராட்டுகிறேன். கா்நாடகப் பணியில் இருந்து மத்தியப் பணிக்கு மாற்றப்பட்டிருக்கிறேன். அதனால், கடைசி முறையாக சீருடையில் இருக்கிறேன். கா்நாடகத்தில் பணியாற்றியது மனதிற்கு திருப்தி அளிக்கிறது. இம்மாநிலம் எனது குடும்பம் உள்ளிட்ட எல்லாவற்றையும் வழங்கியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com