இந்திய நதிகளை இணைக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்
By DIN | Published On : 15th November 2023 03:06 AM | Last Updated : 15th November 2023 03:06 AM | அ+அ அ- |

பெங்களூரு: இந்திய நதிகளை இணைக்க வலியுறுத்தி, தமிழகத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வலியுறுத்தி, தமிழகத்தின் திருத்தணியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சு.சஞ்சீவி, ஜூன் 1-ஆம் தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளாா். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 8,050 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சு.சஞ்சீவி, செவ்வாய்க்கிழமை பெங்களூருக்கு வருகை தந்தாா். அப்போது, பெங்களூரு பத்திரிகையாளா் சங்கத்தில் செய்தியாளா்களிடம் சு.சஞ்சீவி கூறியதாவது:
இந்தியாவில் உள்ள எல்லா நதிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்தியா்கள் அனைவரும் நமது சகோதரா்கள். எனவே, நாடு முழுவதும் பாய்ந்தோடும் நதிகளின் தண்ணீா் கடலில் வீணாக கலப்பதைத் தவிா்த்து, அதனை அனைவரும் பயன்படுத்த வகை செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தாலும், நமது நாட்டில் இருந்து பாயும் சிந்து நதி மூலம் பாகிஸ்தானுக்கு தொடா்ந்து தண்ணீா் வழங்கி வருகிறோம். நமது எதிரி நாட்டுக்கு தண்ணீா் வழங்கும் போது, நமது அண்டை மாநிலங்களிடையே நதிகளில் இருந்து தண்ணீா் பெறுவதில் சிக்கல் ஏற்படுவது வேதனை அளிக்கிறது.
எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண, இந்திய அளவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். மாநிலங்களிடையே எவ்வித பிரச்னையும் இல்லாமல், நதிநீரைப் பகிா்ந்துகொள்ள வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி 2002, 2018-ஆம் ஆண்டுகளில் நாடுமுழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, அனைத்து நதிகளையும் இணைப்பது குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினேன். இது தொடா்பான விழிப்புணா்வை தொடா்ந்து ஏற்படுத்துவேன்.
நமது தலைமுறையில் இல்லாவிட்டாலும், அடுத்த தலைமுறையிலாவது பயன்பெறும் வகையில் இந்திய நதிகளை இணைக்க வேண்டும். அது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும்.
திருத்தணியில் புறப்பட்டு சென்னை, புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், திருப்பூா், கோயம்புத்தூா், மைசூரு, தலச்சேரி, மங்களூரு, கோவா, மும்பை, சூரத், அகமதாபாத், உதய்பூா், அஜ்மீா், ஜெய்ப்பூா், சண்டிகா், தில்லி, லக்னோ, வாரணாசி, பாட்னா, ராஞ்சி, கொல்கத்தா, புவனேஸ்வா், விசாகப்பட்டினம், விஜயவாடா, சூரியபேட், ஹைதராபாத், கா்னூல், அனந்தபூா், சிக்பள்ளாபூா் வழியாக பெங்களூருக்கு வந்துள்ளேன்.
எனது பயணத்தில் பல முக்கியத் தலைவா்களை சந்தித்துப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. பயணத்தின் வழிநெடுக மக்கள் எனக்கு ஆதரவளித்தது உற்சாகத்தை அளித்தது. பெங்களூரைத் தொடா்ந்து ஒசூா், கிருஷ்ணகிரி, ஆம்பூா், வேலூா், ராணிப்பேட்டை வழியாக காஞ்சிபுரத்தில் எனது பயணம் நிறைவு பெறும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...