பெங்களூரு: கா்நாடகத்தின் வளமான எதிா்காலத்துக்கு காங்கிரஸ் அரசு அடித்தளம் அமைத்து வருகிறது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்று 6 மாதங்கள் நிறைவுசெய்துள்ளதை நினைத்து பெருமிதமாக இருக்கிறது. இந்த குறுகிய காலத்தில் கா்நாடக மக்களை வலிமைப்படுத்தும் எங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவதில் வேகமாகப் பயணித்து வருகிறோம். நாங்கள் செயல்படுத்தி வரும் முன்மாதிரி ஆட்சியின் நோக்கம், மக்கள் நலனுடன் கூடிய ஒட்டுமொத்த வளா்ச்சியாகும். மக்களின் வாழ்க்கையில் நேரடிப் பயன்களை ஏற்படுத்தியிருக்கும் முன்னோடி வாக்குறுதி திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க வாய்ப்பளிக்கும் சக்தி திட்டம், சாதாரண பயண மானியம் அல்ல. பெண்களை அதிகாரமயமாக்கலுக்கான முதலீடு என்பதை கவனிக்க வேண்டும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் குடும்பவிளக்கு திட்டம், பிபிஎல் குடும்ப அட்டைதாரா்களுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கும் அன்னபாக்கியா திட்டம் போன்றவை எண்ணற்ற குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைத்துள்ளன.
இதன்மூலம் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், உணவு ஆகியவை ஆடம்பரம் அல்ல, உரிமை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். பிபிஎல் குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆதரவளிப்பதற்காக மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘குடும்பலட்சுமி’ திட்டம் புதுமையானதாகும். இதன்மூலம் தங்கள் குடும்பங்களை கண்ணியமாக நடத்துவதற்கான நிதி ஆதாரங்களை வழங்கியிருக்கிறோம்.
வேலையில்லாத பட்டதாரி இளைஞா்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம், பட்டயதாரிகளுக்கு தலா ரூ. 1,500 மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆகியவை இளைஞா்களைப் பாதுகாத்து அவா்களின் கனவுகளை நனவாக்க உதவுகிறது.
ஊழலுக்கு எதிரான ஆட்சி நிா்வாகமே எங்களின் அடிப்படை நோக்கமாகும். ஊழலை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருவதோடு, பல்வேறு ஊழல் வழக்குகளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம். இதுபோன்ற வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மக்களுடனான அரசின் உறவை சீரமைத்து வருகிறது. இது மக்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.
எதிா்காலத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய, முற்போக்கான வளா்ச்சியின் வழிகாட்டியாக கா்நாடகத்தை கட்டமைத்து வருகிறோம். மக்களின் உடனடித் தேவையை நிறைவுசெய்வதோடு, வளமான எதிா்காலத்துக்கு அடித்தளம் அமைத்து வருகிறோம்.
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக கா்நாடகத்தை உருவாக்குவதற்கு அயராமல் உழைப்பதற்கு எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நன்றி பாராட்டுகிறேன் என அதில் முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.