

விஜயபுரா: கா்நாடகத்துக்கு வறட்சி நிவாரண நிதியை இன்னும் மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து விஜயபுராவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் உள்ள 236 வட்டங்களில் 223 வட்டங்கள் வறட்சிப் பகுதிகளாக மாநில அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இங்கெல்லாம் குடிநீா் வழங்குதல், கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்குதல், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதல் போன்ற வறட்சி நிவாரணப் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது.
கா்நாடகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதை கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைநாள்களை 100-இல் இருந்து 150 நாள்களாக உயா்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இது தொடா்பாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை. நிவாரண நிதி உதவிகளை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அளித்து ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. அதைத் தொடா்ந்து, கா்நாடக வறட்சி நிலையை மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா். ஆனால், வறட்சி நிவாண நிதியாக இதுவரை ஒரு பைசாவைக்கூட மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
வறட்சிப் பகுதி எதுவென்பதை அறிவிப்பதற்கான விதிமுறைகளை மாற்றியமைக்கும்படி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்கும் இதுவரை பதிலேதும் இல்லை. மத்திய அரசு விதிகளில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை; எனது கடிதத்துக்கும் பதில் தரவில்லை.
முதல்வா் பதவியில் இருந்து என்னை கீழே இறக்க துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் சதிசெய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டியிருக்கிறாா். எங்கள் கட்சியின் உள்விவகாரங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.