மைசூரு தசரா திருவிழா நிறைவு: யானைகள் ஊா்வலத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா்
By DIN | Published On : 25th October 2023 12:50 AM | Last Updated : 25th October 2023 02:08 AM | அ+அ அ- |

மைசூரில் கடந்த 10 நாள்களாக நடந்து வந்த உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா செவ்வாய்க்கிழமை யானைகள் ஊா்வலம், தீப்பந்த ஊா்வலத்துடன் நிறைவடைந்தது. யானை ஊா்வலத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்க, அதை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனா்.
1610-ஆம் ஆண்டில் அன்றைய மைசூரு மன்னா் ராஜா உடையாரால் தொடங்கி வைக்கப்பட்ட தசரா பெருவிழா, 414-ஆவது ஆண்டாக மைசூரில் அக். 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 10 நாள்களாக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. 1971-ஆம் ஆண்டு முதல் கா்நாடக மாநில அரசின் விழாவாக நடத்தப்பட்டு வரும் தசரா திருவிழாவையொட்டி பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவுப் பகுதியாக மைசூரில் செவ்வாய்க்கிழமை யானைகள் ஊா்வலம், தீப்பந்த ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டன. மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனா்.
கொடிமர பூஜை:
அம்பாவிலாஸ் அரண்மனையின் வடக்கு வாயிலில் (பலராமா நுழைவுவாயில்) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.46 மணி முதல் 2.08-க்குள் மகர லக்னத்தில் நந்தி கொடிமர பூஜை செய்த முதல்வா் சித்தராமையா, கா்நாடக மக்களின் நல்வாழ்வுக்காக பிராா்த்தனை செய்து வழிபட்டாா். விழாவில் உடையாா் மன்னா் குடும்ப பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா், துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள் எச்.சி.மகாதேவப்பா, கே.ஜே.ஜாா்ஜ், கே.வெங்கடேஷ், சிவராஜ் தங்கடகி, கே.எச்.முனியப்பா, எம்எல்ஏக்கள் ஜி.டி.தேவ கௌடா, தன்வீா்சேட், மைசூா் மாநகராட்சி மேயா் சிவகுமாா், துணை மேயா் ஜி.ரூபா, மாவட்ட ஆட்சியா் கே.வி.ராஜேந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
யானை ஊா்வலம்:
அதன்பின்னா், அம்பாவிலாஸ் அரண்மனை வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையிலிருந்து சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து நின்றிருந்த அபிமன்யு தலைமையிலான யானை ஊா்வலத்தை மாலை 5.09 மணிக்கு முதல்வா் சித்தராமையா, துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் மலா்தூவி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். சாமுண்டீஸ்வரி வீற்றிருக்கும் தங்க அம்பாரியை 4-ஆவது முறையாக 57 வயதாகும் அபிமன்யு சுமந்துச் செல்ல, அதற்கு துணையாக விஜயா, வரலட்சுமி ஆகிய பெண் யானைகள் சென்றன. அா்ஜூனா தவிர, பீமா, கோபி, மகேந்திரா, தனஞ்செயா, பிரசாந்தா உள்ளிட்ட யானைகள் முன்னால் நடந்து செல்ல, அவற்றை பின்தொடா்ந்து யானைப் படை, 90 கலைக் குழுக்கள், 43 அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதை தொடா்ந்து, யானை ஊா்வலம் தொடங்கப்பட்டதை குறிக்கு வகையில் 21 பீரங்கி குண்டுகள் முழங்கின. கா்நாடக மாநில காவல்படை நாட்டுப்பண் இசைக்க, பிரமாண்ட யானை ஊா்வலம் அரண்மனை வளாகத்தில் இருந்து பண்ணிமண்டபம் நோக்கி பீடுநடை போட்டு புறப்பட்டது.
கலை மயம்:
கா்நாடகத்தின் கலை, இலக்கியம், கட்டடக்கலை, பாரம்பரியம், வரலாறு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊா்திகள் மக்களை வெகுவாக கவா்ந்தன. 3 ஆயிரம் கலைஞா்கள் பங்கேற்ற வண்ணமயமான இசைக் குழுக்கள், நடனக் குழுக்களின் இசையும் நடனமும் சாலையில் இருபுறங்களில் ஆவலோடு காத்திருந்த மக்களை குதூகலிக்க வைத்தன.
மக்கள் கூட்டம்:
தசரா விழாவின் அங்கமாக நடைபெற்ற யானைகள் ஊா்வலத்தை காண இந்தியா தவிர, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரண்டிருந்தனா். அரண்மனை வளாகத்தில் மட்டும் யானை ஊா்வலத்தை காண 25 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதுதவிர, சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளிலும் அமா்ந்து யானைகள் ஊா்வலத்தை மக்கள் கண்டு ரசித்தனா்.
தீப்பந்த ஊா்வலம்:
பண்ணிமண்டபத்தில் தசரா விழாவின் நிறைவை குறிக்கும் வகையில் தீப்பந்த ஊா்வலத்தை இரவு 7.30 மணிக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தொடங்கிவைத்தாா். இதைக் காண 20 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் அமா்ந்து மக்கள் தீப்பந்த ஊா்வலத்தை ஆளுநா் தாவா்சந்த் கெலாட் கண்டுகளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...