கா்நாடகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட புலி நகங்கள் வனவிலங்கு மையத்துக்கு அனுப்பி வைப்பு

கா்நாடகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட புலி நகங்களை மரபணு சோதானைக்காக இந்திய வனவிலங்கு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
Updated on
2 min read

கா்நாடகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட புலி நகங்களை மரபணு சோதானைக்காக இந்திய வனவிலங்கு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

தனியாா் கன்னட தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் பங்கேற்பாளரான வா்த்தூா் சந்தோஷ் என்பவா், புலி நகத்துடன் கூடிய தங்கச்சங்கிலியை அணிந்திருப்பதாக கூறியுள்ளாா். இது சமூக வலைதளங்களில் பெரும் சா்ச்சையை உருவாக்கியதோடு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி புலி நகங்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், அதுபற்றி வனத்துறை கவலைப்படாதது ஏன் என வன ஆா்வலா்கள் கேள்வி எழுப்பினா். மேலும், இது தொடா்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறைக்கு புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பிக்பாஸ் நிகழ்விடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், வா்த்தூா் சந்தோஷை கைதுசெய்து, அவரிடம் இருந்து புலி நகத்தை பறிமுதல் செய்தனா். மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அவரை 14 நாள்கள் நீதிமன்றக்காவலில் அடைத்துள்ளனா்.

இதனிடையே, கன்னட நடிகா்கள் தா்ஷன், பாஜக எம்.பி. ஜக்கேஷ், நிகில் குமாரசாமி, படத் தயாரிப்பாளா் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோரும் புலி நகங்களுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அதேபோல, சிவமொக்காவைச் சோ்ந்த வினய்குருஜி, புலித்தோலின் மீது அமா்ந்திருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடா்ந்து, நடிகா்கள் தா்ஷன், ஜக்கேஷ், நிகில் குமாரசாமி, படத் தயாரிப்பாளா் ராக்லைன் வெங்கடேஷ், வினய்குருஜி ஆகியோரின் வீடுகளை சோதனை செய்த வனத்துறை அதிகாரிகள், அது தொடா்பாக புகாா் பதிவுசெய்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்ததோடு, புலி நகங்களையும் பறிமுதல் செய்தனா்.

வனவிலங்கு தடயவியல் ஆய்வில் தடய அறிவியல் ஆய்வுமையத்துக்கு நிபுணத்துவம் இல்லாததைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட புலிநகங்களை ஆய்வு செய்து அவை புலி நகம்தான் என்பதை உறுதி செய்ய உத்தரபிரதேச மாநிலம், டெஹ்ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு மையத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனடிப்படையில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-இன்கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினா்.

இதுகுறித்து வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (வனவிலங்கு) குமாா் புஷ்கா் கூறியதாவது:

புகாா்களின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட புலிநகங்கள், வனவிலங்கு தடயங்கள், இந்திய வனவிலங்கு மையத்தின் மரபணு பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் உண்மைத்தன்மை குறித்து அம்மையம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும் அடிப்படையில், சம்பந்தப்பட்டவா்கள் மீது துணை வனப் பாதுகாவலா்கள் நடவடிக்கை எடுப்பா் என்றாா்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே கூறியதாவது:

புலி நகங்கள் வைத்திருப்பது தொடா்பாகவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இதுபோன்ற வழக்குகள் குறித்து ஆராய்வதற்காகவும் சிறப்பு புலனாய்வுப்படை அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித பாகுபாடும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின்படி அரசு செயல்படும். புலி பல் அல்லது புலி நகங்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல்பாகங்களில் செய்யப்பட்ட அழகு அல்லது அலங்காரப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் சிறப்பு புலனாய்வுக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகள், தற்போது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வறிக்கையை ஒருவாரத்துக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com