ரூ.5.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: 10 போ் கைது
By DIN | Published On : 28th October 2023 12:06 AM | Last Updated : 28th October 2023 12:06 AM | அ+அ அ- |

பெங்களூரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ.5.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, 10 பேரை கைதுசெய்து விசாரித்து வருகிறாா்கள். பெங்களூரில் கல்லூரிகளில் மாணவா்களுக்கும், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியா்களுக்கும் போதைப்பொருட்களை விற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், கடந்த 15 நாட்களாக பெங்களூரில் உள்ள காடுகோடி, கிருஷ்ணராஜபுரம், சோலதேவனஹள்ளி, எச்.எஸ்.ஆா்.லேஅவுட், ஒயிட்பீல்டு, பானசவாடி, பரப்பன அக்ரஹாரா காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, வேறு நகரங்களில் போதைப்பொருட்களை பெங்களூருக்கு கடத்தி வந்து, கல்லூரி மாணவா்கள், தகவல்தொழில்நுட்ப ஊழியா்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. இது தொடா்பாக 8 வெளிநாட்டினா் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.5.5 கோடி மதிப்புள்ள கஞ்சா, கொகைன், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகிறாா்கள். பணதேவைகளுக்காக போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கைதுசெய்யப்பட்டவா்கள் தெரிவித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். போதைப்பொருட்கள் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்துள்ள போலீஸாா், இது குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...