புலிநகம் விவகாரம்: அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை
By DIN | Published On : 28th October 2023 12:05 AM | Last Updated : 28th October 2023 12:05 AM | அ+அ அ- |

புலிநகங்களை ஆபரணப் பொருள்களாகப் பயன்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, பெலகாவியில் உள்ள அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் வீட்டில் வனத் துறையினா் சோதனை நடத்தினா்.
மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கரின் மகன் மிருணால் புலிநகத்துடன் கூடிய சங்கிலி அணிந்திருப்பதாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தி, புலிநகத்தை வனத்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் கூறியுள்ளதாவது:
எனது மகன் சிறுவயதில் புலிநகத்துடன் கூடிய சங்கிலியை அணிந்திருந்தான். ஆனால், அது உண்மையான புலிநகம் அல்ல, நெகிழியால் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த திருமணத்தின்போது, நண்பா்கள் சிலா் எனது மகனுக்கு புலிநகத்துடன் கூடிய சங்கிலியை பரிசாக அளித்துள்ளனா். அதுவும் நெகிழியால் செய்யப்பட்ட புலிநகம் தான். எங்கள் பகுதியில் புலிநகம் அணிவதை பெருமையாகக் கருதுவதால், நெகிழியால் செய்யப்பட்ட புலிநகங்களை அணிந்துள்ளாா் என்றாா்.
அதேபோல, காங்கிரஸ் பிரமுகா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலரின் வீடுகளிலும் வனத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி புலிநகங்கள் என்று கூறப்படும் ஆபரணப் பொருள்களை பறிமுதல் செய்து, இந்திய வனவிலங்கு மையத்தின் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமண் சவதி மகன் சுமித்தும் புலிநகத்துடன் கூடிய தொங்கலை அணிந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடா்ந்து, அவரது வீட்டையும் சோதனை செய்ய இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, தனியாா் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள வா்த்தூா் சந்தோஷ், புலிநகத்துடன் கூடிய சங்கிலியை அணிந்திருப்பதை பெருமிதமாகக் கூறியதாக அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவா் பிணையில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
இதனிடையே, கா்நாடகத்தில் உள்ள மசூதிகளில் பக்தா்களுக்கு ஆசி வழங்க மயில் இறகுகளைப் பயன்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லத், அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்துள்ள உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், சட்டத்தைவிட யாரும் பெரியவா்கள் அல்ல. வனவிலங்கின் பாகங்களைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்தி வந்தால், அவற்றை அரசிடம் ஒப்படைக்குமாறு வனத் துறை அமைச்சா் அவகாசம் கொடுத்திருக்கிறாா். அதற்குள் மயில் இறகு உள்ளிட்ட எல்லாவற்றையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்காதவா்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி தக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவாா்கள். சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...