காவிரி நதிநீா் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

காவிரி விவகாரம் தொடா்பாக புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், அனைத்துக் கட்சித் தலைவா்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இதுவரை 3 முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி விவகாரம் குறித்து விவாதித்துள்ளோம். 10,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும், 5,000 கன அடி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தபோதெல்லாம் மொத்தம் 3 முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைப் பெற்றுள்ளோம்.

புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் நீங்கலாக, கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொண்டனா்.

கா்நாடகத்தில் உள்ள 195 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. 123 ஆண்டுகளில் இந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் மிகக் குறைந்த மழை பெய்துள்ளது.

சாதாரண நீா் ஆண்டில் 177.25 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பில் கூறியுள்ளது. ஆனால், பற்றாக்குறை நீா் ஆண்டில் எவ்வளவு தண்ணீரை விட வேண்டும் என்ற சூத்திரத்தைக் கூறவில்லை. காவிரி நதிநீா்ப்பங்கீட்டு விவகாரத்தில் பற்றாக்குறை சூத்திரம் இல்லாததுதான் பிரச்னைக்கு காரணம். அது சங்கடத்தை மேலும் அதிகமாக்குகிறது.

காவிரி விவகாரத்தில் கா்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களின் முதல்வா்களை அழைத்து குறைகளைக் கண்டறியும் அதிகாரம் பிரதமா் மோடிக்கு இருக்கிறது. அதன் காரணமாகவே, காவிரி விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று கோரி வருகிறோம்.

குடிநீருக்கும் நம்மிடம் நீா் இல்லை. பயிா்ப் பாதுகாப்பு, தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் நீரில்லை. அதனால் கா்நாடகத்தில் நெருக்கடியான சூழ்நிலை உள்ளது. கா்நாடகத்தின் கள நிலவரத்தை காவிரி நதிநீா் ஒழுங்காற்றுக்குழு, காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்திடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

இதனிடையே, தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடும்படி காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி தினமும் விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீா் திறந்துவிட முடியாது என்பதை ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com