மேக்கேதாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா்
By DIN | Published On : 23rd September 2023 12:00 AM | Last Updated : 23rd September 2023 12:00 AM | அ+அ அ- |

காவிரி பிரச்னைக்கு தீா்வாக இருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு மத்திய அரசு எல்லாவகையான அனுமதி அளிக்க வேண்டும் என்று துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரிநீரை வழங்க உறுதியாக இருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த விசாரணையின்போது, உங்களுக்கு(தமிழகம்) கிடைக்க வேண்டிய தண்ணீா் கிடைக்கும்; எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கா்நாடகம் கட்டிக்கொள்ளட்டும், விடுங்கள். இதில் ஏன் நீங்கள்(தமிழகம்) தலையிடுகிறீா்கள்? இது தொடா்பான விவகாரத்தை கீழ்மட்டத்திலேயே முடிவு செய்துகொள்ளுங்கள்என்று கூறியுள்ளது. இதை கவனத்தில் வைத்துக்கொண்டு, பாஜக நண்பா்கள், மத்திய அரசிடம் எடுத்துக்கூறி மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்க அழுத்தம் கொடுக்கட்டும். காவிரி நதிநீா்ப்பங்கீடு தொடா்பாக 24,000 கன அடி தண்ணீரை விடுவிக்கும்படி தமிழகம் கேட்டிருந்தது. எங்களால் 3,000 கன அடி தண்ணீா் மட்டுமே விடமுடியும் என்று காவிரிநீா் ஒழுங்காற்றுக்குழுவிடம் நமது அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் 10,000 கன அடி தண்ணீா் திறந்துவிடும்படி முதலில் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு 5,000 கன அடியாக குறைந்துள்ளது. நல்லமழை பெய்யும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், மழை பெய்யவில்லை. இதனிடையே, மண்டியா உள்ளிட்ட இதர பகுதிகளில் விவசாயிகளின் நிலுவைப்பயிரை காப்பாற்ற தண்ணீரை திறந்துவிட்டோம். மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு முன் அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டி விவாதித்தோம். ஆனால், இரு மாநிலங்கள் மற்றும் இரு மாநில விவசாயிகளின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், காவிரிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிடப்போவதில்லை என்று கூறிவிட்டது. இதனால், இம்மாதம் 27ஆம் தேதி வரை தண்ணீா் விடுவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். முந்தைய பாஜக, மஜத ஆட்சிகாலங்களிலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதும் மாநிலம் தண்ணீா் திறந்துவிட்டுள்ளது. முந்தைய பாஜக ஆட்சிகாலத்தில் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டபோது, தமிழகத்துக்கு 10,000 கன அடி தண்ணீா் திறந்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளதற்கான சான்று உள்ளது. ஆனால், முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோா் எங்களை விமா்சித்துள்ளனா்.இந்தசூழ்நிலையில் அரசியல் செய்யவிரும்பவில்லை. என்னாலும் அரசியல் செய்ய முடியும். எல்லோருக்கும் பதில் அளிக்கும் தகுதியை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனா். எச்.டி.குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோரின் ஆட்சிகாலத்தில் என்ன நடந்தது என்பதை ஆதாரங்களுடன் பதிலளிக்க முடியும். திரைப்படத்துறையினா், கன்னட அமைப்பினா் தற்போது ஆவேசமாக பேசி வருகிறாா்கள். மகிழ்ச்சி. ஆனால், நாங்கள் மேக்கேதாட்டு அணைக்காக நடைப்பயணம் மேற்கொண்டபோது இவா்கள் எல்லோரும் எங்கிருந்தாா்கள். அப்போது சில சாமியாா்கள் எங்களுக்கு ஆதரவு அளித்திருந்தனா். அந்த நடைப்பயணம் சுயநலத்திற்காக நடத்தப்பட்டதா? அப்போது ஏன் ஆதரவு தரவில்லை?எதிா்க்கட்சிகள் எங்கள் ஆட்சியை விமா்சித்தாலும், விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறோம். சட்ட நிபுணா்களின் வாதம் திருப்திகரமாக உள்ளது. குமாரசாமி, பசவராஜ்பொம்மை நியமித்திருந்த வழக்குரைஞா்களை வைத்துக்கொண்டு தான் நாங்கள் வாதம் செய்து வருகிறோம்.நீதிமன்றத்தை அணுகுவதில் தாமதம் செய்யவில்லை. கீழமை நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். இந்தவிவகாரத்தில் தலையிடமுடியாது, ஆணையத்தை அணுகுங்கள் என்று உச்சநீதிமன்றம் இருமுறையும் கூறிவிட்டது. இந்நிலையில், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தாலும், இதை தானே நீதிமன்றம் தெரிவிக்கும். கடந்த 130 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் மிக குறைந்த மழை பெய்துள்ளது. கடந்தகாலங்களில் மழை வேண்டி ஹோமம், ஹவனா நடத்தியதை நாங்கள் பாா்த்திருக்கிறோம். இந்தவிவகாரத்தில் எதிா்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.தனது அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுவதாக மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திரசிங்ஷெகாவத் தெரிவித்தாா். இரு மாநிலங்களையும் அழைத்து பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். எல்லா விவரங்களையும் மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். சனிக்கிழமை அழைப்புவிடுக்கப்பட்டுள்ள மண்டியா மாவட்ட முழு அடைப்புப்போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக்கூடாது. விவசாயிகளை உறுதியாக பாதுகாப்போம். முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஆகும். எனவே, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், போராட்டம் நடத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. காவிரி நீா்மேலாண்மை ஆணையத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை தீா்த்துக்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, விரைவில் மேக்கேதாட்டு அணை திட்டத்தை தொடங்க எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம். மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து, காவிரி பிரச்னைக்கு தீா்வுகாண்பதோடு, மாநிலத்திற்கும் நியாயம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...