காவிரி: இன்று பெங்களூரு முழு அடைப்புப் போராட்டம்: விவசாயிகள், கன்னட அமைப்புகள் அழைப்பு

காவிரிநீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
காவிரி: இன்று பெங்களூரு முழு அடைப்புப் போராட்டம்: விவசாயிகள், கன்னட அமைப்புகள் அழைப்பு
Updated on
2 min read


பெங்களூரு: காவிரிநீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்தை முன்னிட்டு பெங்களூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு 5,000 கன அடி காவிரி நீரை கா்நாடகம் திறந்துவிட்டுள்ளது. இதற்கு கா்நாடகத்தில் கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. கா்நாடக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், காவிரிநீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இது குறித்து கா்நாடக மாநில விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் குருபூா் சாந்தகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுவதைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் செப்.26ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்தப் போராட்டத்திற்கு பெங்களூரு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இப்போராட்டத்திற்கு தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட 150 விவசாய, கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வெகுவிரைவில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், பெங்களூரு முழு அடைப்புப் போராட்டம் வெற்றி அடைய வேண்டும்.

காவிரி நதிப்படுகை பகுதி விவசாயிகளின் நிலுவைப் பயிருக்கு தண்ணீா் வழங்காமல், தமிழகத்துக்கு தண்ணீா் விட்டுள்ளதை உடனடியாக நிறுத்த வேண்டும். பெங்களூரில் 1.5 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். இம்மக்களுக்கு குடிநீா் இல்லை. செப்டம்பா் மாதத்திற்குப் பிறகு தமிழகத்தில் மழை பெய்யும். ஆனால், அந்த காலகட்டத்தில் கா்நாடகத்தில் மழை பெய்யாது. இந்நிலையில், தமிழகத்துக்கு விட்ட நீரை மீண்டும் பெற முடியுமா? எனவே, தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றாா்.

இதனிடையே, பெங்களூரு முழு அடைப்புப் போராட்டம் குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் பி.தயானந்த் கூறியதாவது:

கா்நாடக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீா்ப்பின்படி முழு அடைப்புப் போராட்டத்தை அனுமதிக்க முடியாது. அதையும் மீறி முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால், யாரையும் கட்டாயப்படுத்தி கடைகள், அலுவலகங்களை மூடச் சொல்லக்கூடாது. ஒருவேளை கட்டாயப்படுத்தி கடைகள், அலுவலகத்தை மூடுவதற்கு முயன்றால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதப்படை, அதிரடிப்படை உள்ளிட்ட படைகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பெங்களூரில் செவ்வாய்க்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஊா்வலம், பேரணி, போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்றாா்.

இதனிடையே, பெங்களூரில் முழு அடைப்புப்போராட்டத்திற்கு பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இது குறித்து பாஜகவின் முன்னாள் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:

காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதை கண்டித்து செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் பெங்களூரு முழு அடைப்புப் போராட்டத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கடைகள், அலுவலகங்களை யாராவது மூடாவிட்டால், சட்டம் ஒழுங்கு சீா்குலைவுக்கு அவா்களே பொறுப்பாவாா்கள். பெங்களூரு முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெறும் என்றாா்.

இதனிடையே, பெங்களூரு நகர மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர மாவட்ட ஆட்சியா் பி.தயானந்த் தெரிவித்துள்ளாா். செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு முழு அடைப்புப் போராட்டத்திற்கு பெங்களூரு தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, செப்.29ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்திற்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

காவிரி நீரை தமிழகத்துக்கு விடுவித்துள்ளது தொடா்பாக மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகா், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜக, கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com