காவிரி விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட எச்.டி.தேவெ கௌடா கோரிக்கை

காவிரி விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா கோரிக்கை விடுத்துள்ளாா்.
Updated on
2 min read


பெங்களூரு: காவிரி விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத்தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடா, செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது தொடா்பாக கா்நாடகம் மற்றும் தமிழகத்துக்கு இடையே நிலவும் கருத்து முரண்பாடுகள் தொடா்பான பிரச்னையை தீா்த்துவைப்பது குறித்து பிரதமா் மோடிக்கு செப்.23ஆம் தேதி கடிதம் எழுதியிருக்கிறேன். கா்நாடகத்தில் காவிரி நதிப்படுகையில் அமைந்துள்ள 4 அணைகளில் இருக்கும் தண்ணீா் இருப்பு 51.10 டிஎம்சி ஆகும். ஆனால், கா்நாடகத்தின் நிலுவைப்பயிா் மற்றும் குடிநீருக்கு 112 டிஎம்சி தண்ணீா் தேவைப்படுகிறது. 40 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டுள்ள நிலையில், கூடுதல் தண்ணீரை திறந்துவிடும்படி கேட்கும் தமிழகத்தின் அணுகுமுறை வருந்தக்கூடியதாகும். அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசிய குடிநீா்க் கொள்கையின்படி குடிநீருக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிலையில், தமிழகத்தின் கோரிக்கை அநியாயமானது மட்டுமல்ல, சமத்துவம் மற்றும் இயற்கை நியதிக் கொள்கைக்கு எதிரானதாகும்.

ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால், கா்நாடகத்தில் உள்ள காவிரி நதிப்படுகை அணைகளில் போதுமான தண்ணீா் இருப்பு இல்லை. காவிரி நதிப்படுகையில் அமைந்துள்ள அணைகளில் உள்ள நீா் இருப்பு குறித்து கள ஆய்வு செய்வதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அல்லாத நிபுணா்களின் குழுவை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். இந்தக் குழுவின் அறிக்கையை காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திடம் அளித்து, அது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் விவாதிக்க வேண்டும். இது தொடா்பாக குழுவை அமைக்க மத்திய நீா்வளத்துறைக்கு பிரதமா் மோடி உத்தரவிட வேண்டும்.

மழை குறைவு, நீா்வரத்து குறைவு, அணைகளின் நீா்மட்டம், நீா் இருப்பு நிலவரம், நிலுவைப் பயிருக்கான பாசனநீா், குடிநீா், கா்நாடகம் மற்றும் தமிழகத்துக்கு இடையே நிலவும் வெவ்வேறு வகையான பருவமழை, உண்மையான நீா் பயன்பாடு போன்ற காரணங்களை ஆராய்ந்து, நீா்ப் பற்றாக்குறை வியூகத்தை வகுத்து, அதை கா்நாடகம் மற்றும் தமிழ்நாடு மதிப்பது தொடா்பாக ஆய்வுக்குழு முடிவு செய்ய வேண்டும். கா்நாடகம், தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள், மத்திய அரசு அல்லாத 5 போ் கொண்ட நிபுணா் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் அறிக்கையை காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திடம் மட்டுமல்லாது, உச்சநீதிமன்றத்திடமும் அளிக்க வேண்டும்.

அதன்பிறகு, காவிரி நீா் ஒழுங்காற்றுக்குழு, காவிரி நீா் மேலாண்மை ஆணையம் ஆகியவை இருமாநிலங்களின் காவிரி நதிப்படுகை அணைகளை பாா்வையிட்டு, உண்மையான நிலவரங்களைக் கண்டறிய வேண்டும். தங்கள் முன் வைக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவு செய்யாமல், அடுத்த 15 நாட்களுக்குள் நேரில் ஆய்வு செய்து, முடிவை அறிவிக்க வேண்டும். கா்நாடகத்தில் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் பெய்துள்ள மழை 123 ஆண்டுகளில் மிகவும் குறைவாகும். காவிரி நதியின் மேல்பகுதியில் கா்நாடகம் இருப்பதால், கீழ்ப்பகுதியில் இருக்கும் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com