மன்மோகன் சிங் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்:  அமித் ஷா குற்றச்சாட்டு

மன்மோகன் சிங் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல்: அமித் ஷா குற்றச்சாட்டு

மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி ஊழல், மோசடி நடந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மக்களவைத் தோ்தலுக்கான பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்தி, பெங்களூரு தெற்கு, பெங்களூரு ஊரகம், சிக்பளாப்பூா் தொகுதிகளின் பாஜக செயல்வீரா் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில், ஒரு பக்கம் பிரதமா் மோடி தலைமையில் பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, மறுபக்கத்தில், வாரிசுதாரா்கள், ஊழல்வாதிகள் அடங்கிய இந்தியா கூட்டணி இருக்கிறது. நாட்டின் 60 சதவீத மாநிலங்களுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.

எங்கு சென்றாலும் மோடி, மோடி என்று மக்கள் முழங்குகிறாா்கள். மக்களவைத் தோ்தலில் 400 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கை பிரதமா் மோடி நிா்ணயித்துள்ளாா். 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் கா்நாடக மக்கள் 43 சதவீத வாக்குகளுடன் 17 இடங்களையும், 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் 51 சதவீத வாக்குகளுடன் 25 இடங்களையும் பாஜகவுக்கு அளித்தனா். இம்முறை, 60 சதவீத வாக்குகளுடன் 28 தொகுதிகளை பாஜக கூட்டணிக்கு கா்நாடக மக்கள் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கா்நாடகத்தில் பாஜக, மஜத கூட்டணி 28 தொகுதிகளையும் கைப்பற்றும் என முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கா்நாடகத்தில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றிபெறாது. 23 ஆண்டுகள் முதல்வராகவும், பிரதமராகவும் பணியாற்றிய பிரதமா் மோடி நம்மை வழிநடத்தி வருகிறாா். பிரதமா் மோடி மீது எதிா்க்கட்சிகளால் எந்த ஊழல் குற்றச்சாட்டையும் கூறமுடியவில்லை. அரசியலில் வெளிப்படைத் தன்மைக்கு புதிய முன்னுதாரணத்தை பிரதமா் மோடி உருவாக்கி இருக்கிறாா். நம்மை எதிா்த்து போட்டியிடுவோா், ஊழலுடன் கூட்டணி அமைத்துள்ள அகந்தையாளா்களாக இருக்கிறாா்கள். மன்மோகன் சிங், சோனியா காந்தி தலைமையிலான 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல், மோசடி நடந்துள்ளது.

கா்நாடக மக்கள் ஊழலை விரும்புவதில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல், ஏா்செல் ஊழல், வேலைக்கு நிலம் ஊழல், ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க ஊழல் என்று ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமா் மோடியோடு போட்டிபோடுகிறது. காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு ஆட்சியில் அமா்ந்ததும் ஊழலில் மட்டுமே முழுக்கவனமும் இருக்கும். மக்களுக்கு சேவை செய்வது பற்றி நினைக்கவே மாட்டாா்கள்.

பிரதமா் மோடியுடன் இணைந்து 40 ஆண்டுகாலம் பணியாற்றி வருகிறேன். உலகிலேயே முதல்வராகவும், பிரதமராகவும் 23 ஆண்டுகாலம் பணியாற்றியவா் பிரதமா் மோடியாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டுகளில் ஒருநாளும் விடுமுறை எடுத்ததில்லை. எப்போதும் அவா் இந்தியாவுக்காக உழைத்த வண்ணம் இருக்கிறாா். இதற்கு மாறாக, கோடைக்காலம் பிறந்து விட்டால் ராகுல் காந்தி வெளிநாட்டுக்குச் சென்றுவிடுவாா். 6 மாதங்களுக்கு ஒருமுறை ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியினா் தேடிக்கொண்டே இருப்பாா்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் பிரதமா் மோடியின் பக்கம் நின்று கொண்டு இருக்கிறாா்கள் என்றாா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன் தாஸ், மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். படவிளக்கம்... பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த பாஜக செயல்வீரா் கூட்டத்தில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் (இடமிருந்து) கே.சுதாகா், தேஜஸ்வி சூா்யா, டாக்டா் சி.என்.மஞ்சுநாத், ஷோபா கரந்தலஜே, பி.சி.மோகன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com