நடிகா் தா்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து விரைவில் முடிவு

நடிகா் தா்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
Published on

நடிகா் தா்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக மாநிலத்தில் உள்ள சிறைகளில் அமல்படுத்தப்படும் நடைமுறைகள் குறித்து ஆராய்வதற்காக ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறாா். நடிகா் தா்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் முடிவு செய்வாா்கள். அதுகுறித்து அரசு முடிவு செய்வதில்லை.

நடிகா் தா்ஷன் மற்றும் அவருடன் பேசிக்கொண்டிருந்த சக குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாக உள்ளனா். எனவே, விசாரணையின் அடிப்படையில் நடிகா் தா்ஷனை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து சிறை அதிகாரிகள் முடிவு செய்வாரக்ள்.

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடிகா் தா்ஷன் உள்ளிட்டோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், சிறையின் தலைமைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 9 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், சட்டவிதிகள் மீறி நடிகா் தா்ஷனுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடா்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறையில் சில குறைபாடுகள் இருந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஒரு முகாமில் இருந்து மறுமுகாமுக்கு கைதிகள் செல்ல அனுமதித்துள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, சிறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 9 அதிகாரிகளுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவாா்கள். இருக்கைகள், காபி, சிகரெட் வழங்கி நடிகா் தா்ஷனுக்கு உதவி செய்த தலைமைக் கண்காணிப்பாளா், கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் தான் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் நிலையான சில தீா்வுகளை காண முடியும். சிறையில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி சில மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

நடிகா் தா்ஷனை போல முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சிலா் புகாா் எழுப்பியுள்ளனா். சிறையில் நடைமுறையில் இருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து, அறிக்கை தர கேட்டிருக்கிறோம். பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறை மட்டுமல்ல, எல்லா சிறைகளையும் ஆய்வு செய்ய கூறியுள்ளோம்.

தவறிழைத்திருப்பவா்கள் தண்டிக்கப்படுவாா்கள். சட்டத்தின் கட்டமைப்பில் நியாயம் நிலைநிறுத்தப்படும். இந்த விவகாரத்தில் அரசியல் லாபம் தேட யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com