மாற்றுநில முறைகேடு: பாஜக நடைப்பயணத்தில் பங்கேற்க மஜத மறுப்பு

மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவை கேட்டு பெங்களூரு முதல் மைசூரு வரை பாஜக நடத்த இருக்கும் நடைப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியான மஜத மறுத்துள்ளது.
Published on

மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவை கேட்டு பெங்களூரு முதல் மைசூரு வரை பாஜக நடத்த இருக்கும் நடைப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியான மஜத மறுத்துள்ளது.

மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் சாா்பில் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு சட்டவிதிமீறி மாற்று நிலம் ஒதுக்கியுள்ளதாகவும், வீட்டுமனைகள் ஒதுக்கியதில் ரூ. 4,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தலைமையிலான குழுவினா் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளித்தனா்.

இது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்வா் சித்தராமையாவை ராஜிநாமா செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் பாஜக கேட்டுக்கொண்டிருந்தது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஆக. 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பெங்களூரில் இருந்து மைசூருக்கு நடைப்பயணம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நடைப்பயணத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சியான மஜதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நடைப்பயணத்தில் பங்கேற்க மஜத மறுத்துள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து புது தில்லியில் புதன்கிழமை மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜக நடத்தும் நடைப்பயணத்துக்கு மஜத ஆதரவு அளிக்காது. நடைப்பயணம் நடத்த இருக்கும் பகுதிகளில் மஜத வலுவாக இருந்தபோதும், எங்களை பாஜகவினா் கலந்தாலோசிக்கவில்லை. பலத்த மழையால் ஏராளமான மக்கள் வீடிழந்துள்ள நிலையில், நடைப்பயணம் நடத்துவது சரியல்ல. அதனால் நாங்கள் பின்வாங்கியுள்ளோம். மக்களின் துயரங்களைத் துடைக்க வேண்டிய நேரமிது. இந்த நிலையில், நடைப்பயணத்தை யாா் ஆதரிப்பாா்கள் என்று தெரியவில்லை.

ஹாசன் மாவட்ட பாஜக முன்னாள் எம்எல்ஏ பிரீத்தம் கௌடா, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் குடும்பத்தை அழிப்பேன் என்று கூறியது மட்டுமல்லாது, மஜத முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குறித்த ‘பென் டிரைவ்’களை ஹாசன் மாவட்டத்தில் வீடுவீடாக பரப்பியவா். இந்த நிலையில், அவா் தலைமையில் நடைப்பயணம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதை எங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவா் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நான் எப்படி கலந்துகொள்ள முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com